MEDIA STATEMENTNATIONAL

வெப்பம், பாதுகாப்பற்ற நீர் காரணமாக காஸாவில் நீர் வழி நோய்கள் அதிகரிப்பு

ஜெனிவா, ஏப் 13- சுத்தமான நீர் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக காஸாவில் நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாக காஸாவிலுள்ள ஐ.நா.வின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் நேற்று கூறினார்.

காஸாவில்  வெப்பம் மிகுந்து காணப்படுகிறது என்று ஜெமி மெக்கோல்ட்ரிக் ஜெருசலத்திலிருந்து வீடியோ இணைப்பின் மூலம் கூறினார்.

அங்குள்ள மக்கள் தங்கள் தேவைக்கும் குறைவான நீரையே பெறுகின்றனர். சுத்தமான நீர்ப் பற்றாக்குறை மற்றும் துப்புரவு பணிகளில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக நீர் வழி நோய்களின் பரவல் அதிகரித்து வருகிறது  என்று அவர் தெரிவித்தார்.

மக்கள் தொகை மிகுந்த காணப்படும் பகுதிகளில் நீர் விநியோகத்தை சீரமைப்பதற்கான வழி வகைகளை நாம் அடுத்து வரும் மாதங்களில் கண்டறிய வேண்டும் என்று தனது மூன்று மாத கால பணி முடியும் தருவாயில் காஸாவுக்கு மேற்கொண்ட இறுதி வருகையின் போது அவர் சொன்னார்.

அசுத்தமான நீர் மற்றும் மோசமான துப்புரவு பணிகள் காரணமாக காலரா, வயிற்றுப்போக்கு, ஹெப்படைடிஸ் பி போன்ற நோய்களின் பரவல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

கடந்தாண்டு அக்டோபர் மாத மத்தியில் காஸா மீதான போர் தொடங்கியதிலிருந்து 345,000 வயிற்றுப்போக்கு சம்பவங்கள் பதிவானதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது. அவற்றில் 105,000 சம்பவங்கள் சிறார்களை உட்படுத்தியவை என்றும் அது குறிப்பிட்டது.

காஸாவில் உதவிப் பணிகளை மேற்கொள்வதற்காக உரிய வசதிகளை தொண்டூழிய அமைப்புகளுக்கு ஏற்படுத்தி தருவதற்கான கடப்பாட்டை இஸ்ரேல் வெளிப்படுத்தியுள்ளது. வட காஸாவில் நீர்க் குழாய் திட்டத்தை தொடர்வதற்கும் அது ஒப்புதல் அளித்துள்ளது


Pengarang :