NATIONAL

ஒலிம்பிக் போட்டியை எதிர்கொள்ள சிறந்த செயல்முறையைக் கண்டறியும் முயற்சியில் எம்.தினா-பியெர்லி டான் ஜோடி

கோலாலம்பூர், ஏப் 17- பாரிஸில் நடைபெறவுள்ள 2024 ஒலிம்பிக் போட்டிக்கு அதிகாரப்பூர்மற்ற முறையில் தேர்வாகியுள்ள எம்.தினா- பியெர்லி டான் ஜோடி, அந்த உலகின் தலைசிறந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக சீரான ஜோடியாக விளங்குவதற்குரிய செயல்முறையை தேடி வருகிறது.

தங்களின் பலம் மற்றும் பலவீனங்களைக் கண்டறிவதற்கு ஏதுவாக தாங்கள் விளையாட்டிய ஆட்டங்கள் தொடர்பான பழைய காணொளிகளை பயிற்றுநர்கள் குழுவினருடன் இணைந்து தாங்கள் பார்த்து வருவதாக 24 வயதான பியெர்லி கூறினார்.

அண்மைய சில ஆட்டங்களைப் அடிப்படையாகக் கொண்டு எங்களின் பலவீனங்கள் குறித்து பயிற்றுநர்கள் எங்களுடன் விவாதித்து வருகின்றனர்.

தொடக்க ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம். எனினும், சீரற்றப் போக்கு காரணமாக அடுத்த சுற்றில் தோல்வியைத் தழுவினோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான வழிவகைகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். எங்கள் பயிற்றுநர்கள் 2024 உபர் கிண்ணப் போட்டி மீது எங்கள் பயிற்றுநர்கள் கவனம் செலுத்தி வருவதால் வெளிநாடுகளில் பயிற்சி பெறுவது தொடர்பில் அவர்களிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்று அவர் சொன்னார்.

அண்மையில் மலேசிய பூப்பந்து அகாடமியில் பயிற்சியில் கலந்து கொண்டப் பின்னர் நிருபர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக பங்கேற்கவுள்ள ஆட்டங்களின் எண்ணிக்கையை தேர்வு செய்வது அல்லது தயார் நிலையின் ஒரு பகுதியாக அப்போட்டிகளில் பங்கேற்பதற்கான சாத்தியம் குறித்து வினவப்பட்ட போது, களத்தில் எங்களின் ஆற்றல் குறித்து பயிற்றுநர்களுக்கே அதிகம் தெரியும் என்பதால் இவ்விவகாரத்தில் முடிவெடுக்கும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படைத்து விடுகிறோம் என அவர் சொன்னார்.

தங்களுக்குத் தெரிந்த வரை எதிர்வரும் மே மாதம் 21 முதல் 26 வரை நடைபெறவுள்ள 2024 மலேசியா மாஸ்டர்ஸ் போட்டி மட்டுமே தாங்கள் கலந்து கொள்ளவிருக்கும் ஒரே போட்டியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை மாதம் 26 முதல் ஆகஸ்டு 11 வரை நடைபெறவுள்ளது.


Pengarang :