NATIONAL

கோல குபு பாரு இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க ஒற்றுமை செயலகம் ஒன்று கூடியது

கோலாலம்பூர், ஏப் 17 – அடுத்த மாதம் நடைபெறவுள்ள கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கான இயந்திரத்தை வலுப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் மற்றும்  ஒற்றுமை  அரசாங்கத்தில் உள்ள கட்சிகளின் செயல்முறைகள்  குறித்து விவாதிப்பதற்காக ஒற்றுமை செயலகக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

தாம் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெறும் ஒற்றுமை  அரசாங்க ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கெஅடிலான் ராக்யாட் (கெஅடிலான்) கட்சியின்  பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

இந்த  கலந்துரையாடல் மிகவும் சிறப்பாகவும்  இணக்கப் போக்குடனும்  நடைபெற்றது என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கெடிலான் தகவல் பிரிவுத்  தலைவர் ஃபாஹ்மி ஃபாட்சில், அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின், அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராப் வாஜ்டி டுசுகி, அமானா மகளிர் பிரிவுத் தலைவி டத்தோ அய்மான் அதிரா சாபு மற்றும் ஜசெக துணைப் பொதுச் செயலாளர் லியூ சின் டோங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கோல குபு பாரு தொகுதி  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  ஏப்ரல் 27ஆம் தேதியும்   தொடக்கக் கட்ட வாக்களிப்பு  மே 7ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜசெக பிரதிநிதியான லீ கீ ஹியோங் புற்று  நோய் காரணமாக  கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 58 வயதான லீ,  கடந்த 2013 முதல்  மூன்று தவணைகளாகக் கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

கடந்த  2022 இல் நடைபெற்ற   நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் ஏழாவது இடைத் தேர்தல் இதுவாகும்.

கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மொத்தம் 40,226 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 39,362 வழக்கமான வாக்காளர்கள், 625 போலீஸ்காரர்கள், 238 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.


Pengarang :