NATIONAL

துபாய் விமான நிலையம் 24 மணி நேரத்தில் முழுமையாகச் செயல்படத் தொடங்கும்

துபாய், ஏப்19 – துபாய் அனைத்துலக  விமான நிலையத்தில் வழக்கமான சேவைகள்  24 மணி நேரத்தில்  தொடங்கும் என்று துபாய் விமான நிலையங்களின் தலைமை செயல்முறை அதிகாரி மஜிட் அல் ஜோக்கர் தெரிவித்தார். அந்த விமான நிலையம்  முழு திறன் மற்றும் வழக்கமான அட்டவணைக்கு திரும்புவதை இது  குறிக்கிறது.

முதலாவது  மற்றும் மூன்றாவது முனையம்   படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன என்று அவர் எமிரேட்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என வலியுறுத்திய அல் ஜோக்கர், விமான நிலைய குழுக்கள், கூட்டு சகாக்கள் மற்றும் விமான நிறுவனங்களின் கூட்டு முயற்சிகளின் விளைவாக விமான நிலையச் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதிசெய்வதற்கும்  பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவிகள் வழங்குவதற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியது என்று அவர் குறிப்பிட்டார்.

விமான நிலையம் சகஜ நிலைக்கு திரும்புவதற்கு ஏதுவாகக் கடந்த சில  நாட்களாக  விமான நிலைய  அவசர நடவடிக்கை குழுக்கள், பல்வேறு துறைகள், விவேக பங்காளிகள் மற்றும் விமான நிறுவனங்கள் அயராது பாடுபட்டதோடு   பயணிகளுக்கு வேண்டிய உதவிகளை நல்கி  முயற்சிகளை ஒருங்கிணைக்கவும் விரிவாக உழைத்ததாக அவர் கூறினார்.

பல்வேறு தனியார் மற்றும் அரசு துறைகளை உள்ளடக்கிய குழுவினர் நிலைமையை சீர்செய்ய  கடுமையாக வேலை செய்ததோடு  தொடர்ந்தும் செய்து வருகின்றனர் என அவர் சொன்னார்.

துபாய் விமான நிலையத்தில் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் அயராது உழைத்த அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஊழியர்களை தாம்  பாராட்டுவதோடு  இக்காலகட்டத்தில் பயணிகளின் புரிதலுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.


Pengarang :