கோலா சிலாங்கூர், ஏப் 22: உணவுப் பொருட்கள் வீணாகாமல் இருக்க, அரிசியை அதிக அளவில் பதுக்கி வைக்க வேண்டாம் என பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தப் படுகின்றனர்.

நன்கொடை நோக்கங்களுக்காக வைத்திருக்கும் இருப்புக்கள் உடனடியாக விநியோகிக்கப்பட வேண்டும் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு கூறினார்.

“உங்களிடம் அதிகம் இருந்தால் (அரிசி), தேவைப் படுபவர்களுக்குக் கொடுங்கள்,” என்று அவர் கோலா சிலாங்கூர் நாடளுமன்ற ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, ரும்பன் மக்மூர், கம்போங் கூனுங் சென்யூம், தெமெர்லோ,  பகாங், அருகே உள்ள குப்பைக் கிடங்கில் டஜன் அரிசி பேக்கட்டுகள், மாவு மற்றும் சாடின்கள் கொட்டப் பட்டதைக் காட்டும் வீடியோ வைரலானது.

குறிப்பிட்ட சாலையைப் பயன்படுத்தும் பல சமூக ஊடக பயனர்கள் முகநூல் மற்றும் டிக்டோக்கில் பதிவேற்றியபோது இந்த வீடியோ வைரலானது.

ஏப்ரல் 19 அன்று தனது அதிகாரப்பூர்வ முகநூலின் ஒரு பதிவின் மூலம், இச்சம்பவம் குறித்து விசாரிக்க நெல் மற்றும் அரிசி துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று முகமட் சாபு கூறினார்.

அதே நேரத்தில், ஆலம் ஃப்ளோராவின் துப்புரவு பணியின் போது 40 சதவீத கழிவுகள் உணவாக இருப்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, இந்த ஐடில்பித்ரி பண்டிகைக் கால  உணவு பயன்பாட்டில்  கவனமாக இருக்கவும், உணவை வீணாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என முகமட் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.

ரம்ஜான் மாதத்தில் உணவு கழிவுகள் நாள் ஒன்றுக்கு 12,000 டன் வரை சேகரிக்கப் படுவதால், வீண் விரயத்தை தவிர்க்கலாம்,” என்றார்.

– பெர்னாமா