NATIONAL

லுமுட் ஹெலிகாப்டர்கள்  விபத்து-10 பேர் பலியானது உறுதிப்படுத்தப்பட்டது

கோலாலம்பூர், ஏப் 23 – பேராக் மாநிலத்தின் லுமுட்டில் உள்ள அரச மலேசிய கடற்படைத் (ஆர்.எம்.என்.) தளத்தில் இன்று காலை இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அரச மலேசிய கடற்படையின  உறுப்பினர்கள் 10 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இன்று காலை 9.32 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் கடல்சார் நடவடிக்கை ஹெலிகாப்டரில்  (HOM-AW139) இருந்த  ஏழு உறுப்பினர்கள் மற்றும்  ஆர்.எம்.என். ஃபென்னிக் குழுவின் 3 உறுப்பினர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்ததாகக் கடற்படைத் தலைமையகத்தின்  வியூகத் தொடர்புப் பிரிவு அறிக்கை ஒன்றில் கூறியது.

பாதிக்கப்பட்ட அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டது. அடையாளம் காணும் பணிகளுக்காக  அவர்களின் உடல்கள்  லுமுட் ஆர்.எம்.என்.  இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன என அது குறிப்பிட்டது.

இந்தச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய அரச மலேசிய கடற்படை விசாரணைக் குழுவை அமைக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும்  விசாரணை செயல்முறைகளுக்காவும் அச்சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் அல்லது காணொளிகளைப்  பகிர வேண்டாம் என்று அரச மலேசிய கடற்படை  பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

முன்னதாக, இரண்டு ஹெலிகாப்டர்களும் வானில்  மோதிக்கொள்வதைச் சித்தரிக்கும்  காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் அரச மலேசிய கடற்படையின்  90வது ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கான ஒத்திகைப் பயிற்சியின் போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

– பெர்னாமா


Pengarang :