SELANGOR

கோல குபு பாருவின் வளர்ச்சிக்கு மறைந்த லீ கீ ஹியோகின் அளப்பரிய பணி- தொகுதி மக்கள் பாராட்டு

உலு சிலாங்கூர், ஏப் 24- கோல குபு பாரு தொகுதியில் மூன்று தவணைகள்
சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த மறைந்த லீ கீ ஹியோங் தொகுதி
மக்களுடன் எளிதில் நெருங்கிப் பழகக் கூடியவராக விளங்கி வந்துள்ளார்.

அண்மையில் சிலாங்கூர் கினி மேற்கொண்ட ஆய்வில், லீயின் சேவையை
தொகுதி மக்கள் பரவலாக பாராட்டியதோடு மக்கள் நலன் காக்கப்படுவதை
அவர் எப்போதும் உறுதி செய்து வந்துள்ளார் என்றும் கூறினர்.

நான் எந்த உதவியும் பெற்றதில்லை. எனினும், எனது வர்த்தகம் குறித்து
அவர் தொடர்ந்து விசாரித்து வருவார். அடிக்கடி களத்தில் இறங்கி
மக்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிவார் என வர்த்தகரான
ரோக்கியா ஜூல்கிப்ளி (வயது 63) கூறினார்.

மாநில அரசின் நலத் திட்டங்கள் குறித்த தகவல்களை அவர் மக்களுடன்
பகிர்ந்து கொள்வார். மூத்த குடிமக்கள் உதவித் திட்டத்தில் பதிவு
செய்வதற்கான விண்ணப்பபாரத்தை பூர்த்தி செய்யும்படி அவர் என்னைக்
கேட்டுக் கொண்டார். அவர் நலத்துடன் இருக்கும் போது பல நிகழ்ச்சிகளை
தொகுதியில் நடத்தி வந்தார் என அவர் குறிப்பிட்டார்.

லீ கீ ஹியோங்கின் சேவை அளப்பரியவை என இல்லத்தரசியான ஃபோங்
மேய் லிங் (வயது 58) தெரிவித்தார். முன்பு கோல குபு பாரு அவ்வளவாக
பிரபலம் அடையவில்லை. ஆனால், இப்போது சைக்கிள் மற்றும்
மலையேறும் நடவடிக்கையில் ஈடுபடுவோரின் ஈர்ப்பு மையமாக இந்நகர்
விளங்கி வருகிறது என்றார் அவர்.

சட்ட மன்ற உறுப்பினராக இருந்த போது சுங்கை சீல்லிங் போன்ற
பொழுபோக்கு பூங்காக்களை அதிகம் திறந்தார். இதன் மூலம்
இவ்வட்டாரத்திலுள்ள வணிகர்கள் மற்றும் உணவக நடத்துநர்கள்
பொருளாதார ரீதியில் பலன் பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
என்று அவர் மேலும் சொன்னார்.

லீயின் மறைவைத் தொடர்ந்து கோல குபு பாரு தொகுதியில் அடுத்த
மாதம் 11ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான
வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 27ஆம் தேதியும் தொடக்க வாக்களிப்பு மே
7ஆம் தேதியும் நடைபெறும்.

புற்றுநோயினால் அவதியுற்று வந்த லீ கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி
காலமானார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் மூன்று தவணைகள்
இத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.


Pengarang :