NATIONAL

கே.எல்.ஐ.ஏ. துப்பாக்கிச் சூடு- மனைவியைக் கொல்ல முயன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

சிப்பாங், ஏப் 25- தன் மனைவியைக் கொல்ல முயன்றதாகவும் அவரின்
மெய்க்காப்பாளருக்குக் காயம் ஏற்படுத்தியதாகவும் சுற்றுலா நிறுவன
நிர்வாகி ஒருவருக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று
குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி அஸ்ரோல் அப்துல்லா முன்னிலையில் தமக்கெதிராகக் கொண்டு
வரப்பட்ட குற்றச்சாட்டை ஹபிஸூல் ஹவாரி (வயது 38) என்ற அந்த
ஆடவர் மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பின்னிரவு 1.09 மணியளவில் இங்குள்ள
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கே.எல்.ஐ.ஏ.)
முதலாவது முனையத்தில் தன் மனைவியான ஃபாரா முகமது ஈசா (வயது
38) என்பவரை படுகொலை செய்ய முயன்றதாக அவருக்கு எதிராக
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் 20 ஆண்டுச் சிறை
மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் தண்டனை சட்டத்தின் 307வது
பிரிவின் கீழ் அவ்வாடவருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு
வரப்பட்டுள்ளது. மேலும், காயம் ஏற்படும் பட்சத்தில் இருபதாண்டுகள்
வரை சிறைத்தண்டனை வழங்க இச்சட்டப் பிரிவு வகை செய்கிறது.

அதே இடத்தில் அதே நேரத்தில் மெய்க்காப்பாளரான முகமது நுர் ஹடித்
ஜைனிக்கு ( வயது 38) கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக மற்றொரு
குற்றச்சாட்டையும் ஹபிஸூல் எதிர்நோக்கியுள்ளார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரையிலான
சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும்
தண்டனைச் சட்டத்தின் 326வது பிரிவின் கீழ் அவருக்கு எதிராக
குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

கிளந்தான் செசன்ஸ் நீதிமன்றத்தில் 1960ஆம் ஆண்டு சுடும் ஆயுதச்
சட்டத்தின் 8வது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த ஆடவருக்கு
ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதால் சிலாங்கூர் மாநில பிரசிகியூஷன் அதிகாரி
கூ ஹயாத்தி ஹருண் அவரை ஜாமீனில் விடுவிக்க பரிந்துரைக்கவில்லை.


Pengarang :