NATIONAL

ஜியோனிஸ் ஆதரவு பேச்சாளரின் நிகழ்ச்சிகளுக்குத் தடை- உயர்கல்வி அமைச்சு உத்தரவு

கோலாலம்பூர், ஏப் 25 –  ஜியோனிஸ்டுகளுக்கு ஆதரவாக இருப்பதாக நம்பப்படும் வெளிநாட்டு விரிவுரையாளர் ஒருவர் மலாயா பல்கலைக்கழகத்தில் கலந்துகொள்ள திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்யுமாறு உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காடிர் உத்தரவிட்டுள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்திய  மற்றும் சமூகத்தின் உணர்வுகளை மதிக்காத அந்த விரிவுரையாளரின் செயலை உயர்கல்வி அமைச்சு தீவிரமாகப் பார்க்கிறது  என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி  கூடுதல் விவரங்களை கூடிய விரைவில் தெரிவிக்குமாறு பல்கலைக்கழகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உயர் கல்வியமைச்சின் கீழ் உள்ள ஒவ்வொரு துறை மற்றும் நிறுவனமும் யாரையும்  நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதற்கு முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதோடு அழைக்கப்படும் பிரமுகர்களின்  முழுமையான பின்னணியை நன்கு ஆராய வேண்டும் என நினைவூட்ட விரும்புகிறேன் என்று அவர் சொன்னார்.

எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் உணர்வுகளை  கவனத்தில் கொண்டதாகவும்  அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகக் கூடியதாகவும் வேண்டும் என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

அறிவுசார் திட்டங்களை நடத்த  உயர்கல்விக்  கூடங்களுக்குத் தன்னாட்சி வழங்கப்பட்டிருந்தாலும் மலேசியாவின் பெரும்பான்மையினரின் உணர்வுகளைப்  புறக்கணிப்பதற்கான முழு சுதந்திரம் அவர்களுக்கு உள்ளது என்று அர்த்தமல்ல என்று ஜம்ப்ரி கூறினார்.

ஒருவரின் புலமை பல்வேறு சர்ச்சைகள் நிறைந்ததாகவும்  கல்வி மதிப்புகள் கேள்விக்குரியதாகவும் இருந்தால்  அவர்களை ஏன் அறிவார்ந்த பார்வையாளராக கொண்டு வர வேண்டும்? எந்த  முடிவையும் எடுப்பதற்கு முன் நியாயமான மதிப்பீடு இருக்க வேண்டும் என்று அவர் இன்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டார்.

மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் புரூஸ் கில்லி கலந்து கொள்வது குறித்த பதிவு நேற்று எக்ஸ் தளத்தில் வைரலானது. இந்தப் பதிவை அந்த அரசியல்  அறிவியல் பேராசிரியரே வெளியிட்டிருந்தார்.

இருப்பினும்,  மலேசியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த இடுகையை நீக்கிய கில்லி, இன்று மலேசியாவிலிருந்து புறப்படுவதாகத் தெரிவித்தார்.


Pengarang :