NATIONAL

வேட்பு மனுத்தாக்கல் நிகழ்வை முன்னிட்டு கோல குபு பாருவில் ஐந்து சாலைகள் நாளை மூடப்படும்

கோலாலம்பூர், ஏப் 26- நாளை நடைபெறவுள்ள கோல குபு பாரு தொகுதி
இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிகழ்வை முன்னிட்டு
கோல குபு பாருவிலுள்ள ஐந்து சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும்
அல்லது வழிமாற்றி விடப்படும்.

ஜாலான் மெர்டேக்கா, ஜாலான் அப்துல் ஹமிட், ஜாலான் டத்தோ மூடா
ஜாபர், ஜாலான் மாட் கீலாவ் மற்றும் ஜாலான் கமாருடின் ஆகியவையே
சம்பந்தப்பட்ட அந்த சாலைகளாகும் என உலு சிலாங்கூர் மாவட்ட
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது பைசால் தாஹ்ரிம்
கூறினார்.

இச்சாலைகளை தற்காலிகமாக மூடும் நடவடிக்கை சனிக்கிழமை
பின்னிரவு 12.01 மணி தொடங்கி வேட்பு மனுத்தாக்கல் முடிவுக்கு வரும்
வரை அமலில் இருக்கும் என்று அவர் சொன்னார்.

மூடப்படும் சாலைகளுக்கு மாற்றாக ஜாலான் குபு, ஜாலான் டத்தோ
தெபால், ஜாலான் ராசதுரை, ஜாலான் டத்தோ பாலாய், ஜாலான் சைட்
மஷ்யோர், ஜாலான் பகாங் ஆகிய சாலைகளைப் பயன்படுத்துமாறு
வாகனமோட்டிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக
சாலை மூடல் மற்றும் மாற்று வழி தொடர்பான வழிகாட்டிகளை
வாகனமோட்டிகள் பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் அவர்
அறிவுறுத்தினார்.

வேட்மனுத் தாக்கல் நிகழ்வு உலு சிலாங்கூர் பல்நோக்கு மண்டபம்
மற்றும் விளையாட்டு காம்ப்ளெக்சில் நாளை காலை 9.00 மணிக்கு
நடைபெறவுள்ளது.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் (வயது 58)
புற்றுநோய் காரணமாகக் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில்
இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


Pengarang :