NATIONAL

அரசாங்கம் இந்திய சமூகத்தை புறக்கணிக்கவில்லை, பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கிறது- அன்வார்

கோலாலம்பூர், மே 2- மடாணி அரசாங்கம் இந்திய சமூகத்தை ஒரு போதும் புறக்கணிக்கவில்லை. மாறாக,  அச்சமூகத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

எந்தவொரு பிரிவினரையும் ஒதுக்கி வைக்காமல் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் உதவும் அணுகுமுறையை அரசாங்கம் கொண்டுள்ளது என அவர் சொன்னார்.

அரசு பூமிபுத்ரா மக்களுக்கு உதவுவதை முன்னிரிமையாகக் கொண்டுள்ளது. பூஜியத் தொகை ஆட்டம் என்பது இதன் பொருளல்ல. மலாய்க்காரர்களுக்கு உதவுவதை மற்றவர்களைப் புறக்கணிப்பதாக யாரும் நினைத்து விடக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

ஆகவே,  பூமிபுத்ரா திட்டத்தைப் பற்றி கோபமோ பொறாமையோ கொள்ள வேண்டாம் என இந்திய சமூகத்திற்கு நான் வலியுறுத்துகிறேன்.

ஐம்பது, அறுபது  ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கிடைக்கவில்லை. அதனை அரசு தீர்த்து வருகிறது. முதல் முறையாக உள்துறை அமைச்சின் வழி பல  பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்துள்ளது.

இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்காக மித்ராவில் 10 கோடி வெள்ளி ம ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தெக்குன் மூலம் கூடுதலாக 3 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.  இது தவிர, அமானா இக்தியாரில் கூடுதலாக 5 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளைப் பாதுகாக்கும் நோக்கில் நிதி ஒதுக்கியுள்ளது.

அதற்கும் மேலாக அரசாங்கத்தின் பல திட்டங்களின் வாயிலாக இந்திய சமுகம் பயன் பெற்று தான் வருகிறது. ஆகவே இந்திய மக்களுக்கு அரசு உதவவில்லை என்ற கூற்றை நான் நிராகரிக்கிறேன் என்றார் அவர்.

நேற்றிரவு  நான்கு தொலைக்காட்சி நிலையங்களுக்கு   வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது  பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.


Pengarang :