SELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனை தொடர வேண்டும்- கோல குபு பாரு மக்கள் எதிர்பார்ப்பு

உலு சிலாங்கூர், மே 2- மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனைத் திட்டம்  எதிர்காலத்திலும் தொடரப்பட வேண்டும் என்று கோல குபு பாரு தொகுதி மக்கள் விரும்புகிறார்கள்.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்  (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான  இந்த மலிவு விற்பனை  சமையல் பொருள்களுக்கான செலவை மிச்சப்படுத்த உதவுவதாக 49 வயதான ஐ. முகிலரசு கூறினார்.

நான் என் அம்மாவுடன் வசிக்கிறேன். ஒரு விபத்து காரணமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டதால் என் சேமிப்பை மட்டுமே நம்பியிருக்கிறேன். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதால்  இது போன்ற மலிவு விற்பனை  மிகவும் உதவுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இது போன்ற மலிவு  விற்பனைகள்  தொடர்ந்து நடத்தப்படும்  என்று நான் நம்புகிறேன். ஏனெனில் இது மக்களின் குறிப்பாக, குறைந்த வருமானம் பெறும் தரப்பினரின் சுமையை குறைக்கிறது  என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற மலிவு விற்பனையில்  சந்தித்தபோது கூறினார்.

மற்ற சமையல் பொருட்களை விற்பனையில் சேர்ப்பதன் மூலம் இந்த  விற்பனையை மீண்டும் நடத்த முடியும் என்று தாம் நம்புவதாக   கமாலியா ஜூல்கிப்ளி (வயது 75) குறிப்பிட்டார்

இரண்டாவது முறையாக இந்த விற்பனையில் கலந்து கொள்கிறேன்.  வெகு தொலைவில் நடைபெற்றதால் இதற்கு முன் நடைபெற்ற மலிவு விற்பனைகளில் பங்கு கொள்ள இயலாமல் போனது. நானும் என் சகோதரியும் ஒன்றாக வசிப்பதால் இருவரும் மோட்டார் சைக்கிளில் இங்கு வந்தோம் என்றார் அவர்.

சந்தைகளுடன் ஒப்பிடும்போது இங்கு  பொருட்கள்  குறிப்பாகக் கோழி மற்றும் முட்டை ஆகியவை மலிவாக விற்கப்படுகின்றன. ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு கூடுதல் பொருள்களுடன் மலிவு விற்பனை இங்கு நடக்கும் என நம்புகிறேன் என்று அவர் சொன்னார்.

இதற்கிடையில்,  கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மலிவு விலையில் பொருட்களை வாங்க தாம் இங்கு வந்ததாக 83 வயதான லீ கியூ என்ற மூதாட்டி கூறினார்.

சந்தையுடன் ஒப்பிடும்போது விலை மிகவும் மலிவானது என்பதால் இந்த விற்பனை தொடரும் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது மக்களுக்கானது  என்றார் அவர்.

இந்த விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும்  5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் ஐந்து கிலோ அரிசி  13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :