திரங்கானு காற்பந்து விளையாட்டாளர்  வீட்டில் நிகழ்ந்த கொள்ளையை விசாரிக்க சிறப்பு குழு

கோல திரங்கானு, மே 5- திரங்கானு எஃப்.சி.  குழுவின் கால்பந்து வீரர் அக்யார் ரஷீத் வீட்டில் நிகழ்ந்த கொள்ளையை விசாரிக்க போலீசார் சிறப்புக் குழுவை  அமைத்துள்ளனர்.

இரண்டுக்கும் மேற்பட்டவர்களை கொண்டதாக சந்தேகிக்கப்படும் அக்கும்பலைப் பிடிக்க போலீசார் முழுமையான விசாரணையை மேற்கொள்வார்கள் என்று  கோலதிரங்கானு மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நூர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள  கண்காணிப்பு கேமராக்களை (சிசிடிவி)  போலீசார் ஆய்வு செய்துள்ளனர். மேலும்   விசாரணைக்கு உதவ இரண்டு சாட்சிகளும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

திரங்கானு காவல்துறை தலைமையகத்தில் இன்று நடைபெற்ற  திரங்கானு காவல்துறைத் தலைவரின் பதவி ஒப்படைப்பு  நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

எனினும், சந்தேக நபர்களை  கண்டுபிடிக்க உதவும் எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்று அஸ்லி கூறினார்.

விசாரணைக்கு இடையூறு ஏற்படுவதைத்  தவிர்க்க இச்சம்பவம் தொடர்பில் ஊகங்களை  சமூக ஊடகங்கள் வழி பரப்ப வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

கடந்த வியாழனன்று  நிகழ்ந்த அச்சம்பவத்தில் இரண்டு கொள்ளையர்கள் தாக்கியதில்  அக்யார் தலை மற்றும் கால்களில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், முன்னாள் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (நட்மா) நடவடிக்கை  அமலாக்கப் பிரிவு இயக்குநர் டத்தோ முகமட் கைரி கைருடின்  திரங்கானு மாநில புதிய  காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே சமயம் நடப்பு  மாநில போலீஸ் தலைவர் டத்தோ மஸ்லி மஸ்லான் நட்மாவுக்கு பொறுப்பேற்றுள்ளார்.


Pengarang :