ECONOMY

எரிபொருள் உதவித் தொகை ரத்து விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை- அன்வார் கூறுகிறார்

பட்டர்வெர்த், மே 5- எரிபொருள் உதவித் தொகை தொடர்பில் வெளிநாட்டு ஊடகம் வெளியிட்ட செய்தி நெறியற்றது எனக் குற்றஞ்சாட்டிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இவ்விவகாரம் குறித்து அமைச்சரவை நிலையில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.

நமது உறுதியான நிலைப்பாடு காரணமாக அண்டை நாடு மற்றும் அனைத்துலக ஊடகங்கள் எதிர்மறையான செய்திகள் மூலம் நம்மை தாக்கி வருகின்றன. உதாரணத்திற்கு ஜோகூரில் கெஸினோ சூதாட்ட மைய விவகாரத்தைக் கூறலாம். அது குறித்து விவாதிக்கப்படாத நிலையில் பரபரப்பான செய்தியாக ஆக்கப்பட்டு விட்டது என்று அவர் சொன்னார்.

இப்போது டீசலுக்கான உதவித் தொகையை மீட்டுக் கொள்வது தொடர்பான விவகாரம் தலையெடுத்துள்ளது. இதன் தொடர்பில் பூர்வாங்க விவாதங்கள் நடத்தப்பட்ட போதிலும் அதன் அமலாக்க தினம் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதற்கான செயல்முறைகள் முறையாக விளக்கப்பட வேண்டும். மக்களுக்கு சுமையை அளிக்கக்கூடாது என்பது இதன் அடிப்படை கோட்பாடாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

இங்குள்ள தி லைட் ஹோட்டலில் இன்று நடைபெற்ற ‘சமூகத் தலைவர்களுடன் பிரதமரின் சந்திப்பு‘ எனும் நிகழ்வுக்குப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நம்பத்தகாத வட்டாரங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை மேற்கோள் காட்டி இச்செய்தியை வெளியிட்ட அந்நிய ஊடகங்களை அன்வார் கடுமையாகச் சாடினார்.

ஊடகச் சுதந்திரத்தின் அடிப்படை கோட்பாடுகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அவற்றில் பண்பு நெறிகளும் உண்மையும் இருக்க வேண்டும். வெளியிடும் செய்திகள் நம்பத்தக்க வட்டாரத்திலிருந்து பெறப்பட்டதாக இருக்க வேண்டும். இது கொள்கை விவகாரம் என்பதால் அரசாங்கம் உரிய நோட்டீஸ் வழங்கியப் பின்னரே இதன் தொடர்பான அறிவிப்பை வெளியிட முடியும் என்றார் அவர்.

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக எரிபொருளுக்கான உதவித் தொகையை அகற்ற மலேசியா திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.


Pengarang :