NATIONAL

கோல குபு பாருவில் விளையாட்டு வசதிகளை தரம் உயர்த்தப் பாடுபடுவேன்- வேட்பாளர் பாங் கூறுகிறார்

உலு சிலாங்கூர், மே 6- விளையாட்டு வசதிகள் உள்பட அடிப்படை
கட்டமைப்புகளை தரம் உயர்த்துவதில் தாம் கவனம் செலுத்தவுள்ளதாக
கோல குபு பாரு இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசின் சார்பில்
போட்டியிடும் பாங் சேர்க் தாவ் கூறினார்.

தேர்தல் பிரசாரத்தின் போது பொது மக்களுடன் குறிப்பாக
இளைஞர்களுடன் தாம் நடத்திய சந்திப்பில் அதிகமாக முன் வைக்கப்பட்ட
கோரிக்கைகளில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதும் அடங்கும்
என்று அவர் சொன்னார்.

ஆகவே, இத்தொகுதியிலுள்ள இளைஞர்களுக்கு சிறப்பான மற்றும்
அதிகமான விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தித் தருவதில் நான் கவனம்
செலுத்துவேன் என்று அவர் குறிப்பிட்டார்.

மறைந்த சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் இத்தொகுதியில்
விளையாட்டு மற்றும் கலாசாரம் சார்ந்த நிகழ்வுகளை அதிகளவில்
ஏற்பாடு செய்தார். இந்த தேர்தலில் எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் அவரது
சாதனைகளை நானும் தொடர்வேன் என்றார் அவர்.

இங்குள்ள கோல குபு பாரு, கம்போங் சுவாங் ராசா சமூக மண்டபத்தில்
நேற்று நடைபெற்ற லீ கீ ஹியோங் கிண்ண சிலம்பப் போட்டியை
பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக்
குறிப்பிட்டார்.

முன்னதாக அவர், பெத்திங் ரிம்பாயு கேம்சைட், கம்போங் பூலோர் தெலுக்
கிராமத்தைச் சேர்ந்த 30 பூர்வக்குடி இளைஞர்களுடன் பாங் சந்திப்பு
நடத்தினார்.

பிரசாரத்தின் ஒன்பதாவது நாளான நேற்று அடர்த்தியான நிகழ்ச்சி
நிரலுக்கு மத்தியிலும் நீரில் மூழ்கி மாண்டவர்களின் குடும்பத்தினரை
கோல குபு பாரு மருத்துவமனையில் பாங் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நேற்று பிற்பகல் பத்தாங் காலி, சுங்கை பாலாக் ஆற்றில் குளித்துக்
கொண்டிருந்த போது தந்தையும் அவரின் இரு பிள்ளைகளும் நீரில் மூழ்கி
மாண்டனர்.


Pengarang :