NATIONAL

26 ஆண்டு காலப் போராட்டத்திற்கு நல்ல தீர்வு, இதில் அரசியல் லாபம் தேட  வேண்டாம் பாப்பா ராய்டு கோரிக்கை

சு.சுப்பையா

பெஸ்தாரி  ஜெயா.மே.6- பண்டார் பெஸ்தாரி  ஜெயாவுக்கு அருகிலுள்ள மேரி, மிஞ்ஞாக், சுங்கை திங்கி, நைகல் காடனர், புக்கிட் தாகார் ஆகிய 5 தோட்டத் தொழிலாளர்கள் வீட்டு பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைத்து விட்டது.

இதில் எந்த தரப்பும் அரசியல் இலாபம் தேடக் கூடாது என்று சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் துவான் பாப்பா ராய்டு கேட்டுக் கொண்டார்.

26 ஆண்டுகால இப்பிரச்சனை தற்போது மத்திய அரசும் மாநில அரசும் ஒன்று என்பதால் தீர்வு கிடைத்துள்ளது. இப்பிரச்சனை கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. இதற்கு முன்னர் பெர்ஜாயா நிறுவனம் 20 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து விட்டது. தொழிலாளர்கள் சொந்த வீடு இலவசமாக வேண்டும் என்று போராடி வந்தனர்.

தற்போது சிலாங்கூர் மாநில அரசு ரி.ம. 35 மில்லியனும் மடாணி அரசு ரி.ம. 40 மில்லியனும் ஒதுக்கீடு செய்து தீர்வு கண்டுள்ளது. ஆக மொத்தம் ரி.ம. 75 மில்லியன் செலவில் 245 தொழிலாளர்களுக்கு இலவசமாக தரை வீடுகள் கட்டித் தரப் படும் என்று மாண்புமிகு பாப்பாராய்டு தெரிவித்தார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி, பெர்ஜாயா நிறுவனத்திற்கும் பாப்பா ராய்டு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.

245  தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடு கனவு நிறைவேறியுள்ளது. இத்துடன் இப்பிரச்னை முடிவுக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த 5 தோட்டங்களில் உள்ள கடை உரிமையாளர்களுக்கு இந்த திட்டத்தில் கடைகள் வழங்கப்படுமா என்று சிலாங்கூர்கினி கேட்ட போது ” அது குறித்து இந்த வீடமைப்பு திட்டம் வரையும் போது பேசப் படும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த 5 தோட்டங்களில் கடந்த 100 ஆண்டுகளாக இருந்து வரும் ஆலயங்கள் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் நிலைமை குறித்து சிலாங்கூர் கினி கேட்ட போது ” ஆலயங்கள் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் தற்போது இருக்கும் இடத்தில் அப்படியே நிலை நிறுத்தப் படும் ” என்று பாப்பாராய்டு தெரிவித்தார்.


Pengarang :