NATIONAL

கே.கே.பி. இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் மாமன்னரின் படம்-  இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்

கோலாலம்பூர், மே 6 – கோல குபு பாரு இடைத்தேர்தல் பிரச்சார வாகனத்தில் மலேசிய மாமன்னர் மேன்மை தங்கிய  சுல்தான் இப்ராஹிமின் புகைப்படத்தை காட்சிப்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட இருவர் மீது இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

அறுபத்தாறு வயதுடைய அவ்விரு நபர்கள் மீதும் கோல குபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை நேற்று துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில்  சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அவ்விருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன என்று  பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

குரோத நோக்கில் செயல்பட்டதற்காக 1954 ஆம் ஆண்டு தேர்தல் குற்றச் சட்டத்தின்  4ஏ (1) பிரிவின் கீழ் அவர்கள் மீது  குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படும் என்று ரஸாருடின் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மாமன்னர் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் படங்களை காட்சிப்படுத்தியதற்காக இரண்டு பேரை போலீசார் கைது செய்து நான்கு சக்கர  இயக்க வாகனத்தையும்  பறிமுதல் செய்தனர்.

அந்த இருவரும் மே 5ஆம் தேதி  முதல் நாளை வரை மூன்று நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.


Pengarang :