NATIONAL

போலீஸ் நடவடிக்கையில் இருவர் கைது- 21 கிலோ போதைப் பொருள் பறிமுதல் 

ஈப்போ, மே 6 – போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் உள்ளூர் ஆடவர்கள் இருவரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து  21 கிலோ ஹெராயின்  போதைப் பொருளை  பறிமுதல் செய்தனர்.

தைப்பிங்கிற்கு அருகில்,  சிம்பாங்கில் உள்ள ஜாலான் மேடான் சிப்பாங்கில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகப் பேராக் மாநில  காவல் துறைத் தலைவர்   டத்தோஸ்ரீ முகமது  யூஸ்ரி ஹசான் பஸ்ரி கூறினார்.

சாலையோரம் புரோட்டோன் வாஜா  காரில் இருந்த   41 மற்றும் 47 வயதுடைய இரு சந்தேக நபர்களையும்  பேராக் மாநில போலீஸ்  தலைமையகத்தின்  போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின்  சிறப்புக் குழு   கைது செய்ததாக அவர் சொன்னார்.

அந்ந காரில் நடத்தப்பட்டச்  சோதனையில்  46  பிளாஸ்டிக் பொட்டலங்கள் அடங்கிய வெள்ளை சாக்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஹெராயின் என சந்தேகிக்கப்படும் 262,275  வெள்ளி மதிப்பிலான 21 கிலோ எடையுள்ள  போதைப் பொருள் இருந்தது. மேலும்  இரண்டு கைப்பேசிகள்  மற்றும் ஒரு கார் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.

அவ்விருவர் மீதும் நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில்  அவர்கள்  மோர்பின் வகை போதைப் பொருளை உட்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இரு சந்தேக நபர்களும்  போதைப்பொருள் தொடர்பான முந்தைய  குற்றப் பதிவுகளைக் கொண்டிருப்பது தொடக்கக் கட்ட  விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் இன்று
பேராக் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மீனவர்கள் மற்றும் உணவக உதவியாளர்களாக பணிபுரியும் அந்த இரண்டு சந்தேக நபர்களும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுவதாக முகமது  யுஸ்ரி தெரிவித்தார்.

நாட்டின் வடக்கிலிருந்து   பெறப்படும் போதைப் பொருள், மாநிலத்தில் உள்ள உள்ளூர் சந்தையில் விநியோகிக்கப்படுவதாக நம்பப்படுகிறது, மேலும் இந்த போதைப் பொருளை  சுமார் 20,000 போதைப் பித்தர்கள்  பயன்படுத்த முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு சந்தேக நபர்களும் மே 4 முதல் ஆறு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  மேலும் இந்த வழக்கு 1952ஆம் ஆண்டு  அபாயகர போதைப் பொருள் சட்டத்தின்  39பி பிரிவின் கீழ்  விசாரிக்கப்பட்டு வருகிறது.


Pengarang :