கடந்தாண்டில் 65 லட்சம் சுற்றுப்பயணிகள் சிலாங்கூருக்கு வருகை

ஷா ஆலம், மே 7- சிலாங்கூர் மாநிலத்திற்கு கடந்தாண்டு 65 லட்சத்து 40 ஆயிரம் சுற்றுப் பயணிகள் வருகை புரிந்தனர். நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 50 லட்சம் பயணிகளை விட இது அதிகமாகும்.

கடந்த 2022ஆம் ஆண்டில் மாநிலத்திற்கு வந்த 44 லட்சத்து 60 ஆயிரம் சுற்றுப் பயணிகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 46.4 விழுக்காட்டு உயர்வை பிரதிபலிக்கிறது. அதே சமயம் கடந்த 2021ஆம் ஆண்டில் 31 லட்சத்து 90 சுற்றுப்பயணிகளை மாநிலம் ஈர்த்தது.

கடந்தாண்டு மாநிலத்திற்கு வருகை புரிந்தவர்களில் 44 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்நாட்டினராகவும் 20 லட்சத்து 90 ஆயிரம் பேர் வெளிநாட்டினராகவும் இருந்தனர் என்று டூரிசம் சிலாங்கூர் சென். பெர்ஹாட் அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்த வியக்கத்தக்க வளர்ச்சி முதன்மையான சுற்றுலா மையமாக சிலாங்கூர் உருவெடுத்துள்ளதை காட்டுகிறது என்று அது குறிப்பிட்டது.

சூழியல் சுற்றுலா, தீம் பார்க் எனப்படும் பொழுதுபோக்கு பூங்காக்கள்,  உணவுச் சுற்றுலா, பாரம்பரிய மற்றும் கலாசார சுற்றுலா ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய மாநிலத்தின் சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட வியூக முன்னெடுப்புகள் உரிய பலனைத் தந்துள்ளதை இது காட்டுகிறது.

சிலாங்கூரை ஈர்க்கும் அனைத்துலக சுற்றுலா சந்தைகளில் சீனா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய ஐந்து நாடுகள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. மாநிலத்திற்கு வருகை புரிந்த மொத்த அனைத்துலக சுற்றுப்பயணிகள் மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் 46 விழுக்காடாக உள்ளனர் என டூரிசம் சிலாங்கூர் கூறியது.

மாநிலத்திற்கு வந்த உள்நாட்டுச் சுற்றுப்பயணிகள் கோலாலம்பூர், ஜோகூர், பேராக், பகாங், பினாங்கு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 36 விழுக்காடாக இருந்தனர்.

மாநிலத்திலுள்ள 12 ஊராட்சி மன்றங்களில் சுபாங் ஜெயா மாநகர் மன்றம் மிக அதிகமாக அதாவது 21 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுப்பயணிகளை ஈர்த்தது.


Pengarang :