NATIONAL

தென் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு- இரு மலேசியர்கள் உள்பட நால்வர் காயம்

நாராதிவாட், மே 8- தென் தாய்லாந்தின் நாராதிவாட்டில் கடந்த  திங்கள்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இரு மலேசிய பயணிகள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

இரவு 9.35 மணியளவில் நிகழ்ந்த  இச்சம்பவத்தில்  கிளந்தான்,  தும்பாட்டைச் சேர்ந்த 38 மற்றும் 31 வயதுடைய இரண்டு பெண்கள் லேசான  காயங்களுக்கு ஆளானதாக சோங்க்லாவில் உள்ள மலேசியத் தூதரக அதிகாரி  அகமது  ஃபாஹ்மி அகமது சர்காவி தெரிவித்தார்.

அவ்விருவருக்கும் கடுமையான காயங்கள்  ஏற்படவில்லை. அதிர்ச்சி, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் மற்றும் லேசான காயங்கள் போன்ற அறிகுறிகள் மட்டுமே  காணப்பட்டன என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட  இரு பெண்களும் சிகிச்சைக்காக  நாராதிவட் ரச்சனகரின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தில் பாதுகாப்பு தன்னார்வ தற்காப்பு கட்டுப்பாட்டு மையத்தில் பணியில் இருந்த இரண்டு பாதுகாப்பு தன்னார்வ உறுப்பினர்களும் காயமடைந்ததாக முவாங் நரதிவாட் பிராந்திய காவல்துறைத் தலைவர் கர்னல் போலீஸ்  பிரச்சயா பைதே கூறினார்.

கட்டுப்பாட்டு மையத்திற்கு அருகில் நிறுணாதப்பட்டிருந்த மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் சொந்தமாகத்  தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்தது ஆரம்ப விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது என்றார் அவர்.

இந்த கட்டுப்பாட்டு மையத்திற்கு அருகில் இருந்த இரண்டு மலேசியப் பெண்களும் இத்தாக்குதலில்  சிறு காயங்களுக்கு ஆளாகினர்  என்று அவர் கூறினார்.


Pengarang :