NATIONAL

ஜோகூர் கால்பந்து விளையாட்டாளரின் கார் கண்ணாடி உடைப்பு- சந்தேக நபர்களுக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் பாரு, மே 8- இங்குள்ள ஜாலான் ஸ்ரீ கெலாங்கில் நேற்றிரவு தேசிய கால்பந்து குழுவின் முன்னாள் கேப்டனான ஷாபிக் ரஹிமின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டச் சம்பவம் தொடர்பில் சந்தேகப்பேர்வழிகளுக்கு எதிராகப் போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு
சந்தேகப் பேர்வழிகளும் தீவிரமாகத் தேடப்பட்டு வருவதாக ஜோகூர் பாரு
செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட்
கூறினார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 427வது
பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

நேற்றிரவு 10.05 மணியளவில் ஸ்ரீ கெலாம் ஜே,டி.டி. பயிற்சி
மையத்திலிருந்து ஷாபிக் தனது ஹோண்டா சிட்டி காரில் பந்தாய் லீடோ
நோக்கி சென்று கொண்டிருந்த போது இத்தாக்குதல் நிகழ்ந்தது.

தாம் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில்
அடையாளம் தெரியாத இரு ஆடவர்கள் தம்மைப் பின்தொடர்ந்து
வந்ததாகவும் அவர்களில் ஒருவன் சுத்தியலால் காரின் பின்புறக்
கண்ணாடியை உடைத்ததாகவும் அவர் சொன்னார்.

அதிர்ச்சியில் உறைந்த போன நான் காரை உடனடியாக நிறுத்தினேன்.
காரின் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்திய அந்த மர்ம ஆசாமிகள்
என்னை அச்சுறுத்தும் விதமாகச் சுத்தியலைக் காட்டினர். பயந்து போன
நான் காரை பின்னோக்கிச் செலுத்தினேன் என அவர் கூறினார்.

பின்னர் அந்த ஆடவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இத்தாக்குதலில்
தனது காரின் பின்புறக் கண்ணாடி சேதமடைந்தது என்று இச்சம்பவம் தொடர்பில் போலீசில் புகார் செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

கால்பந்து விளையாட்டாளர்களுக்கு எதிராக கடந்த ஒரு வாரக் காலத்தில்
மேற்கொள்ளப்பட்ட மூன்றாது தாக்குதல் இதுவாகும்.

சிலாங்கூர் எஃப்.சி. குழுவின் முன்னணி விளையாட்டாளரான ஃபைசால்
ஹலிம் கடந்த வாரம் எரித் திராவக தாக்குதலுக்கு இலக்கானார். அவர்
இப்போது பெட்டாலிங் ஜெயாவிலுள்ள தனியார் மருத்துவமனையில்
சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இச்சம்பவம் நிகழ்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் கோல
திரங்கானுவிலுள்ள தேசிய விளையாட்டாளரான அக்யார் அப்துல் ரஷிட்
வீட்டில் நிகழ்ந்த கொள்ளை முயற்சியின் போது அவர் தலையிலும்
கால்களிலும் தாக்கப்பட்டார்.


Pengarang :