NATIONAL

கொள்ளையின் போது மாற்றுத் திறனாளி படுகொலை, தாயார் காயம்- புக்கிட் மெர்தாஜாமில் சம்பவம்

புக்கிட் மெர்தாஜம், மே 9- இங்குள்ள குவார் பெராஹூ, குபாங் செமாங்கில்
உள்ள வீடொன்றில் நேற்று நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தின் போது
மாற்றுத் திறனாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான அந்த 40 வயது நபர்
கை,கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் வீட்டின்
அறை ஒன்றில் இறந்த கிடக்கக் காணப்பட்டதாகச் செபராங் பிறை தெங்கா
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹெல்மி அரிஸ் கூறினார்.

வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்ததாக சந்தேகிக்கப்படும்
கொள்ளையர்கள் அந்த மாற்றுத் திறானளியின் தாயாரையும்
கை,கால்களைக் கட்டி மற்றொரு அறையில் அடைத்ததாக அவர்
சொன்னார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 80 வயது முதியவர்
ஒருவரிடமிருந்து நேற்று காலை 8.36 மணியளவில் தாங்கள் புகாரைப்
பெற்றதாக அவர் தெரிவித்தார்.

வீட்டிலுள்ள பொருள்கள் கலைந்து நிலையில் காணப்பட்டதோடு தனது
மகன் சுயநினைவிழந்த நிலையில் கிடப்பதாக அந்த முதியவர் தனது
புகாரில் கூறியிருந்தார். அந்த முதியவர் வீட்டின் அறையைச்
சோதனையிட்ட போது 70 வயதான தன் மனைவி கேபிளைக்  கொண்டு
கை,கால்கள் கட்டப்பட்ட நிலையிலும் வாயில் துணி திணிக்கப்பட்டு அதன்
மேல் கருப்பு நிற நாடா ஒட்டப்பட்டு தரையில் கிடப்பதை அவர்
கண்டுள்ளார் என ஹெல்மி தெரிவித்தார்.

மற்றொரு அறையில் அவரின் மகனும் அதே போல் கை,கால்கள்
கட்டப்பட்டு வாயில் துணி அடைக்கப்பட்டு கருப்பு நாடாவினால்
ஒட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் என்று அவர் அறிக்கை ஒன்றில்
சொன்னார்.

பாராங்கத்தியேந்திய இரு கொள்ளையர்கள் வீட்டை உடைத்து உள்ளே
சென்று வீடு முழுவதும் அலசி ஆராய்ந்து ரொக்கம் மற்றும்
தொலைக்காட்சியுன் தப்பின் சென்றது தொடக்கக் கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 40 வயதுடைய சந்தேக நபர்
ஒருவரை தாங்கள் விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளதாகக் கூறிய
அவர், அவ்வாடவருக்கு எதிராக குற்றச்செயல் மற்றும் போதைப் பொருள்
தொடர்பில் 10 முந்தையக் குற்றப்பதிவுகள் உள்ளது விசாரணையில்
தெரியவந்துள்ளது என்றார்.


Pengarang :