NATIONAL

சிலாங்கூரில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு 169 கோடி வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், மே 10- கிள்ளான், பெட்டாலிங் மற்றும் சிப்பாங்கில்  அதிக முன்னுரிமை உள்ள ஐந்து வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மேற்கொள்ள  சிலாங்கூர் மாநில வடிகால் மற்றும்  நீர்ப்பாசனத் துறைக்கு (ஜேபிஎஸ்) மத்திய அரசு 169  கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

வெள்ளத் தடுப்புத் திட்டங்கள்  தவிர, ஆற்றங்கரைகளை வலுப்படுத்து மற்றும் வடிகால்களை மேம்படுத்துவது போன்றத்  திட்டங்களையும் தமது துறை அமல்படுத்தவுள்ளதாகச் சிலாங்கூர் ஜேபிஎஸ் இயக்குநர் நாசர் சலீம் கூறினார்.

நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த சிறிது காலம் பிடிக்கும் என்பதால்  மாநில அரசு மத்திய  மற்றும் குறுகிய கால திட்டங்களை அமல்படுத்த மாநில வடிகால், நீர்பாசனத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் வழி வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் தீர்வினை ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது  என்று அவர் சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த  பேட்டியில் கூறினார்.

மாநிலத்தில், குறிப்பாக, அடிக்கடி ஏற்படும் 79 இடங்களிலும்  வெள்ள பாதிப்பு அபாயம்  உள்ள 354 பகுதிகளிலும் மத்திய காலத் திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசு, சிலாங்கூர் அரசு மற்றும் மாநில ஜே.பி.எஸ். இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டார்.

வடிகால்கள்  எப்போதும் முறையாகச் செயல்படுவதை உறுதிசெய்வதற்கு ஏதுவாக  பெறப்படும் புகார்களின் அடிப்படையில் சேதங்களை தமது  துறை உடனடியாகச் சரி செய்கிறது என்றார் அவர்.

மேருவில் தேங்கியுள்ள நீரை அகற்றுவது போன்ற அவசரத் தேவைகளுக்காக  123 நடமாடும் நீர் இறைப்பு பம்புகளை தமது துறை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

பல வெள்ள எச்சரிக்கை சமிக்ஞை முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.  இவற்றில் சைரன் அமைப்பு மற்றும் வெள்ளம் குறித்து மக்களுக்கு  எஸ்எம்எஸ் வழி எச்சரிக்கை விடுப்பது ஆகியவையும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

வடகிழக்கு பருவமழைக்கு முன் வடிகால் கொள்ளளவு உகந்த அளவில் இருப்பதை உறுதி செய்வதற்காக இத்துறை வருடாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது என்றார் அவர்.


Pengarang :