NATIONAL

ஷேரிட்டி ஷீல்ட்‘ போட்டியிலிருந்து விலக சிலாங்கூர் எஃப்.சி. முடிவு- சிலாங்கூர் சுல்தான் ஆதரவு

ஷா ஆலம், மே 10 – இவ்வாண்டிற்கான  ‘ஷேரிட்டி ஷீல்ட்‘ கால்பந்து போட்டியில் பங்கேற்பதிலிருந்து விலகும் சிலாங்கூர் எஃப்.சி. குழுவின் முடிவுக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா ஒப்புதல் அளித்துள்ளதோடு முழு ஆதரவும் வழங்கியுள்ளார்.

சிலாங்கூர் எஃப்.சி மற்றும் ஜோகூர் டாருள் தாக்ஸிம் (ஜே.டி.டி.) குழுக்களுக்கிடையிலான இந்த போட்டி நாளை மே 10ஆம் தேதி இஸ்கந்தார் புத்ரி, சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த போட்டியை ஒத்தி வைப்பதற்கு சிலாங்கூர் எஃப்.சி. செய்து கொண்ட விண்ணப்பத்தை நிராகரிக்கும் மலேசிய கால்பந்து லீக்கின் (எம்.எஃப்.எல்.) முடிவு குறித்து மேன்மை தங்கிய சுல்தான் ஏமாற்றம் தெரிவித்தார்.

கால்பந்து விளையாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சில சம்பவங்கள் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு 2024ஆம் ஆண்டிற்கான முதல் பதிப்பாக விளங்கும் இந்த போட்டியில் பங்கேற்பதிலிருந்து விலகும் சிலாங்கூர் எஃப்.சி.யின் முடிவு சரியான ஒன்று என அக்குழுவின் புரவலர் என்ற முறையில் மேன்மை தங்கிய சுல்தான் கருதுகிறார் என்று சிலாங்கூர் அரச அலுவலகம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியது.

தற்போது நாம் முன்னுரிமை அளிக்க வேண்டியது விளையாட்டாளர்களின் பாதுகாப்பே தவிர கிண்ணத்தை வெல்வது அல்ல என்று சுல்தான் தெரிவித்தார்.

இந்த விஷயத்தில் பாதுகாப்பு மட்டுமின்றி விளையாட்டாளர்களின் மனோ நிலையும் உள்ளடங்கியுள்ளது. தேசிய விளையாட்டாளர் முகமது ஃபைசால் ஹமிமுக்கு எதிராக நடத்தப்பட்ட எரிதிராவக தாக்குதலால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, விளையாட்டில் வன்முறை எந்த ரூபத்தில்  உருவெடுத்தாலும் அதனை எதிர்த்துப் போராடுவதில் தாம் ஒன்றுபட்டு நிற்பதாக அவர் கூறினார்.

விளையாட்டாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த சம்பவங்களின் தீவிரதத்தை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :