NATIONAL

சிலாங்கூரில் பரம ஏழைகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவு- வலுவான மாநில அரசுக்கு சான்று

உலு சிலாங்கூர், மே 10- சிலாங்கூரில் பரம ஏழைகளின் எண்ணிக்கை
அபரிமிதமாகக் குறைந்து வருகிறது. சிலாங்கூர் அரசின் வலுவான குழு
நிலையிலான முயற்சியே இந்த வெற்றிக்குக் காரணம் என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தில் 861ஆக இருந்த மிகவும் வறிய நிலையிலுள்ளவர்களின்
எண்ணிக்கை 245ஆக குறைந்து விட்டதை நேற்று முன்தினம் நடைபெற்ற
மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் காட்டுகின்றன.

எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் மாநிலத்தில் மிக வறிய நிலையை ஒழிக்க
மாநில அரசு எடுத்துள்ள முயற்சிகளுக்கு ஏற்ப இது அமைந்துள்ளது என்று
அவர் சொன்னார்.

மாநிலத்தில 3,000 பேராக இருந்த வறிய நிலையிலுள்ளவர்களின்
எண்ணிக்கை கடந்த வாரம் 861 பேராகக் குறைந்தது. வெறும் ஐந்தே
நாட்களில் அந்த எண்ணிக்கையை 245ஆக குறைத்து விட்டோம். நம்மிடம்
உள்ள வலுவான குழுவே இதற்கு காரணம் என்றார் அவர்.

கோல குபு பாரு இடைத் தேர்தலை முன்னிட்டு நேற்றிரவு இங்குள்ள மினி
ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஒற்றுமை அரசின் மாபெரும் இறுதி பிரச்சாரக்
கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எனினும், பரம ஏழ்மையை ஒழிப்பதில் சிலாங்கூர் அரசின் சாதனைகள்
இருபுறமும் கூர் முனை கொண்ட கத்தியைப் போல் உள்ளதாகக் கூறிய
அமிருடின், ஏழ்மையை ஒழிப்பதில் கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய
மாநிலங்களுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முக்கியத்துவம்
அளிப்பது இதற்கு சான்றாக உள்ளது என்றார்.

கிளந்தான் மற்றும் திரங்கானுவில் நடைபெற்றதைப் போல் பிரதமருடன்
முழு அளவிலான கூட்டத்தில் பங்கேற்பதற்குரிய வாய்ப்பு எங்களுக்கு கிட்டவில்லை. இதனால் நாங்கள் (சிலாங்கூர் அரசு நிர்வாகம்) சற்று பொறாமை கொள்கிறோம் என்றார் அவர்.


Pengarang :