MEDIA STATEMENTNATIONAL

எரி திராவக வீச்சு தொடர்பான காணொளியை கசியவிட்ட நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஷா ஆலம், மே 24- சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் எரி திராவக வீச்சு தொடர்பான காணொளியை கசியவிட்ட தரப்பினரை அடையாளம் காணும் முயற்சியில் சிலாங்கூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

விசாரணை தொடர்ந்து நடைபெற்று  வரும் ஒரு வழக்கின் சாட்சிப் பொருளான அந்த காணொளியை பகிரங்கப்படுத்தியது குற்றச் செயலாகும் எனக் கூறிய  சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான், இதன் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 203ஏ பிரிவு மற்றும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233வது பிரிவு ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

தண்டனைச் சட்டத்தின் 203ஏ பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்க படுவோருக்கு பத்து லட்சம் வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அதே சமயம் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் இத்தகைய குற்றங்களுக்கு 50,000 வெள்ளி வரையிலான அபராதம் ஓராண்டு வரையிலான சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் இக்குற்றம் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் 1,000 வெள்ளி அபராதம் விதிக்கவும் இந்த சட்டப் பிரிவு வகை செய்கிறது என்றார் அவர்.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வகைப்படுத்தப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணையில் சாட்சிப் பொருளாக விளங்கும் அந்த 56 வினாடி காணொளி சமூக ஊடங்கள் பரவியது கண்டு பிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து இந்த ஊடக அறிக்கை வெளியிடப் படுவதாக அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்டவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் அந்த காணொளியை யாரும் பகிர வேண்டாம் என அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.


Pengarang :