MEDIA STATEMENT

சிங்கப்பூர் ஏர்லைன்சின் 20 பயணிகள் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்

பேங்காக், மே 24- கடுமையான காற்றுக் கொந்தளிப்பில் சிக்கி அவசரமாக பேங்காக்கில் தரையிறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் இருபது பயணிகள் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று. வருவதாக தாய்லாந்து மருத்துவமனை வட்டாரம்  நேற்று கூறியது.

ஐ.சி.யு.வில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையில் மாற்றமில்லை என்று பேங்காக் சமித்தவேஜ் ஸ்ரீநகாரின் மருத்துவமனையின் இயக்குநர் அடினுன் கித்திதனபாய்போல் கூறினார்.

தீவிர கவனிப்பு தேவைப்படுவதால் அவர்கள் ஐ.சி.யு. பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு அவர்களின் உடல் நிலையில் பாதிப்பு இல்லை என்றார்.

அந்த விமானத்தில் பயணித்தவர்களில் 40 பயணிகள் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 22 பேருக்கு முதுகுத் தண்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அறுவருக்கு மூளை மற்றும் தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

இரண்டு வயது குழந்தை முதல் 83 வயது முதியவர் வரை இங்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பெற்று வரும் விமானப் பயணிகளில் பத்து பிரிட்டிஷ் பிரஜைகள், ஏழு மலேசியர்கள், நான்கு பிலிப்பைன்ஸ் பிரஜைகளும் அடங்குவர் என்று அவர் சொன்னார்.

மியன்மாருக்கு உயரே பறந்து கொண்டிருந்த போது அந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் காற்றுக் கொந்தளிப்பில் சிக்கி கடுமையாகக் குலுங்கியது. இதன் காரணமாக பயணிகள் விமானத்தின் நாலாபுறமும் மோதுண்டதோடு பிரிட்டிஷ் பிரஜை ஒருவரும் மாரடைப்பினால் உயிரிழந்தார்.


Pengarang :