ANTARABANGSAMEDIA STATEMENT

நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பாப்புவா நியுகினிக்கு உதவ மலேசியா தயார்- பிரதமர் கூறுகிறார்

கோலாலம்பூர், மே 25- பெரும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பாப்புவா நியு கினிக்கு உதவு மலேசியா  தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

எனது எண்ணமெல்லாம் அந்நாட்டின் எங்கா மாநிலத்தில் நேற்று நிகழ்ந்த பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பாப்புவா நியு கினி மக்களைப் பற்றியதாக இருக்கிறது.

பாப்புவா நியு கினியில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு இயன்ற  உதவிகளை வழங்க மலேசியா தயாராக உள்ளது என்று அன்வார் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

மிகவும் ஒதுக்குப்புறமான, மலைகள் நிறைந்த மற்றும் கரடு முரடான பகுதியில் இந்த நிலச்சரிவு நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வது சவால்மிக்கதாக ஆகியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

நாட்டின் தலைநகரான போர்ட் மேரேஸ்பியின் வடமேற்கே 600 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள எங்கா மாநிலத்தின் கோகலாம் கிராமத்தில் நேற்ற அதிகாலை 3.00 மணிக்கு  இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக ஊடகங்கள் கூறின.

இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும், இறந்தவர்கள்  எண்ணிக்கை குறித்த விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

இந்த நிலச்சரிவில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா கூறியது.

இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கும் பாப்புவா நியு கினி அரசுக்கும் தங்களின் இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக விஸ்மா புத்ரா தெரிவித்தது.

 


Pengarang :