ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மந்திரி புசாருக்கு ஆதரவு தெரிவித்த செலாட் கிளாங் பெர்சத்து உறுப்பினருக்கு சட்டமன்றத்தில் புதிய இடம்

ஷா ஆலம், மே 27- சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு தனது ஆதரவைப் புலப்படுத்திய செலாட் கிளாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷிட் அசாரி மாநில சட்டமன்றத்தில் இனி எதிர்க்கட்சி வரிசையில் அமர மாட்டார்.

வரும் ஜூலை மாதம் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் போது அந்த பெர்சத்து கட்சி உறுப்பினருக்கு புதிய இடம் ஒதுக்கப்படும் என்று மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வேங் சான் கூறினார்.

அரசாங்க ஆதரவு உறுப்பினராக அப்துல் ரஷிட் கருதப்படுவதால் அவருக்கு அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மத்தியில் இடம் ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எனினும், இரு தவணைகள் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்த மூத்த உறுப்பினர் என்ற முறையில் அவருக்கு முன்வரிசையில் இடம் வழங்கப்படும் என அவர் மாநில சட்டமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மந்திரி பெசாருக்கு தனது வெளிப்படையான ஆதரவை அப்துல் ரஷிட் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிராக பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் தன்மூப்பான நடவடிக்கைகள் குறித்து மௌனம் சாதிக்கும் பெரிக்கத்தான் நேஷனல் தலைவர்களின் போக்கில் அதிருப்தியடைந்தது உள்ளிட்ட காரணங்களால் தாம் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியிருந்தார்.

எந்தவொரு நிர்பந்தமும் இன்றி தாம் சொந்தமாக இந்த முடிவை எடுத்ததாக அப்துல் ரஷிட் தெரிவித்திருந்தார்.

இது தவிர, தனது செலாட் கிளாங் தொகுதி மக்களின் நலன் காக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கிலும் சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாட்டை அங்கீகரிக்கும் வகையிலும் தனது இந்த முடிவு அமைந்துள்ளது என்றார் அவர்.

இதனிடையே, கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாங் சோக் தாவ் வரும் ஜூலை 4ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்வார் என லாவ் வேங் சான் சொன்னார்.


Pengarang :