ANTARABANGSAECONOMY

உலகில் டிங்கி  சம்பவங்கள் அதிகரிப்பு- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனிவா, மே 31 – கடந்த  ஐந்து  ஆண்டுகளில்  உலகளவில் டிங்கி சம்பவங்களின்  பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக அமெரிக்காவில் இந்த நோய்த் தாக்கம் இவ்வாண்டு  ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம்
நேற்று வெளியிட்ட புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு ஏப்ரல் வரை அமெரிக்காவில் எழுபது லட்சத்திற்கும்  அதிகமான டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த  2023 ஆம் ஆண்டில் மொத்தமாக பதிவான 45 லட்சம் டிங்கி சம்பவங்களை விட இது அதிகமாகும் என ஜெர்மன் செய்தி நிறுவனம் கூறியது.

டிங்கி பரவல்களின் தற்போதைய அளவு,  அனைத்துலக  அளவில் பரவும் அபாயம், பரவலை பாதிக்கும் காரணங்கள் மற்றும் அந்நோயின் சிக்கலான தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொள்கையில் உலகளாவிய அளவில்  இந்நோயினால் ஏற்படும்  ஒட்டுமொத்த ஆபத்து இன்னும் அதிகமாக மதிப்பிடப்படுகிறது.

டிங்கி என்பது வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கொசுக்களால் பரவும் உயிருக்கு ஆபத்தான வைரஸ் நோயாகும். கடந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் தென் ஐரோப்பாவின் சில பகுதிகள் உட்பட 90 நாடுகளில்  76 லட்சம் டிங்கி சம்பவங்கள்   பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம்  தெரிவித்துள்ளது.

உலக சுகாதார  நிறுவனத்தின்  மதிப்பீட்டின்படி 16,000 க்கும் மேற்பட்டோர் கடுமையான  பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். மேலும் 3,000 பேர் இந்நோயினால்  இறந்துள்ளனர். சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. சில சந்தர்ப்பங்களில், டிங்கி கடுமையான இரத்தப்போக்கு மற்றும் உடல் உறுப்பு சேதத்தை ஏற்படுத்தும்.


Pengarang :