ECONOMYMEDIA STATEMENTNATIONAL

முகநூல் வழி மோட்டார் சைக்கிள் விற்பனை- மோசடிக் கும்பலிடம் வர்த்தகர் வெ.200,000 இழந்தார்

சிரம்பான், ஜூன் 2-  விருப்பத்திற்குரிய  பதிவு எண்களுடன் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்வதாக  சமூக ஊடகமான முகநூல் மூலம் கும்பல் ஒன்று செய்த விளம்பரத்தை நம்பி   தொழிலதிபர் ஒருவர் சுமார்  200,000 வெள்ளியை இழந்துள்ளார்.

இந்த மோட்டார் சைக்கிள் வர்த்தக நோக்கத்திற்காக 49 வயதான அந்த தொழிலதிபர்  அறிமுகம் இல்லாத  நபருடன் வாட்ஸ்அப்  செயலி  மூலம்   தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக  சிரம்பான் மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி முகமது ஹாத்தா சே டின் தெரிவித்தார்.

ஏழு ஹோண்டா ரக மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக அந்த வணிகர் கடந்த மே 24 முதல் 28 வரை ஏழு தவணைகளில் மொத்தம் 179,376 வெள்ளியை அந்நபரின் வங்கிக் கணக்கில் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

வாக்குறுதியளிக்கப்பட்ட படி  மோட்டார் சைக்கிள் கிடைக்காததால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வணிகர் இது குறித்து காவல் துறையில் புகார் செய்தார் என அவர்  தெரிவித்தார்.

இச்சம்பவம்  தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ்  விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் இன்று  வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.

இணையம் வாயிலாக  குறைந்த விலையில் பொருட்களை விற்க முன் வருபவர்களை எளிதில் நம்ப வேண்டாம் என்பதோடு மோசடிக்கு ஆளாகாமல் இருக்க  சம்பந்தப்பட்ட விளம்பரங்களை உடனடியாக சரிபார்க்கும் படியும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.


Pengarang :