ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போலீசாருடன் துப்பாக்கிச் சூடு-   இரு சந்தேக நபர்கள் பலி

 கோலாலம்பூர், ஜூன் 2- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்)  396.5  கிலோமீட்டரில் பேராக், தஞ்சோங் மாலிம் நிறுத்தத்தில் நேற்று போலீசாருடன்  நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் பலியான இருவரும் 30 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஆடவர்கள்  என்றும் இச்சம்பவம் குறித்த தகவல் நேற்றிரவு 11.32 மணிக்கு  கிடைத்ததாகவும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் கூறினார்.

இரு நபர்கள் பயணம் செய்த சந்தேகத்திற்குரிய  சாம்பல் நிற புரோட்டான் வாஜா காரை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் போலீஸ் அதிகாரிகள் குழு  பேராக் மாநில போலீஸ்  தலைமையகத்தின்  குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் பின் தொடர்ந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் சொன்னார்.

போலீசார் தங்களைப் பின்தொடர்வதை உணர்ந்த சந்தேகப் பேர்வழிகள்  வடக்கு நோக்கிச் செல்லும் பிளஸ் நெடுஞ்சாலையில் நுழைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்தபோது ​​​சந்தேக நபர்கள் போலீஸ்காரர்களை நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

போலீசாரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் அந்த வாகனத்தின் உள்ளே சோதனை செய்தபோது இரு நபர்களும் ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபர்களில் ஒருவருக்கு 23 முந்தைய குற்றப் பதிவுகளும் போலீசாரால் தேடப்படுவது தொடர்பான 6 பதிவுகளும் உள்ளதாகவும்  மற்ற சந்தேக நபர் அடையாளம்   காணப்பட்டு வருவதாகவும் ஹுசைன் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டம் பிரிவு 307வது பிரிவு  மற்றும் 1960ஆம் ஆண்டு ஆயுத சட்டத்தின் பிரிவு 8 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 03-60641223 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :