ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சாலை விபத்தில் கர்ப்பிணியும் கணவரும் பரிதாப மரணம்- குவா மூசாங்கில் சம்பவம்

குவா மூசாங், ஜூன் 3- குழந்தைக்காக ஒன்பது ஆண்டுகள் தவமிருந்தப் பின் இரட்டைக் குழந்தைகளை பிரசவிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தம்பதியரின் மகிழ்ச்சியான தருணம் விபத்து ரூபத்தில் வந்த விதியால் முற்றாக சிதைந்து போனது.

ஜாலான் குவா மூசாங்- லோஜிங் சாலையின் 43வது கிலோ மீட்டரில் நேற்று காலை 9.35 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ரிட்வான் எஃபாண்டி யூசுப் (வயது 43) என்ற ஆடவரும் ஆறு மாத கர்ப்பிணியான சுஹானா கைருடின் (வயது 37) என்ற அவரின் மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் காரியிலிருந்து வீசியெறியப்பட்ட அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் அத்தம்பதியரின் இரு பிள்ளைகள் காயங்களுக்குள்ளாகி குவா மூசாங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து நிகழ்ந்த போது அத்தம்பதியர் பிள்ளைகளுடன் ஈப்போவிலிருந்து குவா மூசாங் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சிக் சூன் ஃபூ கூறினார்.

சம்பவ இடத்தை அடைந்த போது அவர்கள் பயணம் செய்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு சாலையோரம் இருந்த கால்வாயின் சுவரை மோதியதாக அவர் சொன்னார்.

அத்தம்பதியர் கேமரன் மலையில் உள்ள ஹோட்டலில் தங்கும் நோக்கில்  ஈப்போவிலிருந்து புறப்பட்டதாக சுஹானாவின் சகோதரியான சுஹைலி கைருடின் (வயது 49) கூறினார். 

எனினும், கேமரன் மலையில் அனைத்து ஹோட்டல்களும் நிரம்பி விட்டதால் அவர்கள் காரிலே சற்ற நேரம் ஓய்வெடுத்து விட்ட குவா மூசாங் புறப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :