SELANGOR

ஷா ஆலம் மாநகரின்  12வது டத்தோ பண்டாராக முகமது பவுஸி பதவியேற்றார்

ஷா ஆலம், ஜூன் 6- ஷா ஆலம் மாநகரின் 12வது டத்தோ பண்டாராக  டத்தோ முகமது  பவுஸி முகமது  யாத்திம் இன்று  அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

இங்குள்ள விஸ்மா எம்.பி.எஸ்.ஏ.வில் இன்று நடைமெற்ற பதவியேற்பு நிகழ்வில் துணை டத்தோ பண்டார் மடியான் பாவே, துணை நிர்வாக செயலாளர் அஸ்மா முகமது ஜின், துறை இயக்குனர்கள் மற்றும் மாநகர் மன்ற  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஐம்பத்தேழு  வயதான முகமது பவுஸி இதற்கு முன்பு சுபாங் ஜெயா டத்தோ பண்டாராக பொறுப்பு வகித்தார்.  கடந்த ஜூன் 4ஆம் தேதி பணி ஓய்வு பெற்ற செரெமி தர்மனுக்குப் பதிலாக ஷா ஆலம்  டத்தோ பண்டார் பொறுப்பை முகமது பவுஸி ஏற்றுள்ளார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு பொதுச் சேவைத் துறையில்  இணைந்த பவுஸி, பிரதமர் துறை, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுகளில் பணியாற்றியுள்ளார்.

கடந்த  2011 முதல் 2015 வரை கோம்பாக் மாவட்ட மற்றும் நில அலுவலகத்தில் முதன்மை உதவி மாவட்ட அதிகாரியாகவும், உலு சிலாங்கூர் மாவட்ட மற்றும் நில அலுவலகத்தில் (2015-2019) மாவட்ட அதிகாரியாகவும் அவர் பணியாற்றினார்.

மேலும், கடந்த 2019 முதல் 2020 வரை சிப்பாங் நகராண்மைக் கழகத் தலைவராகவும்  2020 முதல் 2023 வரை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத் தலைவராகவும் பணியாற்றிய பவுஸி,  பின்னர் சுபாங் ஜெயா டத்தோ பண்டாராகப் பொறுப்பேற்றார்.

திரங்கானு மாநிலத்தை  பூர்வீகமாகக் கொண்ட அவர்,  மலேசியா புத்ரா பல்கலைக்கழகத்தில்  நில வள மேலாண்மைத் துறையில் முதுகலைப் பட்டமும்,  மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில்  சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டமும் (ஹானர்ஸ்)  தேசிய பொது நிர்வாகக் கழகத்தில் பொது நிர்வாகத்தில் டிப்ளோமாவும் பெற்றுள்ளார்.


Pengarang :