SELANGOR

மேம்பாட்டுத் திட்டத்தை சமர்ப்பிக்காத வரை ஷா ஆலம் அரங்கை உடைக்க அனுமதியில்லை- டத்தோ பண்டார் உறுதி

ஷா ஆலம், ஜூன் 7- புதிய ஷா ஆலம் விளையாட்டு வளாகம் (கே.எஸ்.எஸ்.ஏ.) தொடர்பான முழு மேம்பாட்டுத் திட்டத்தை சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளர் ஷா ஆலம் மாநகர் மன்றத்திடம் சமர்ப்பிக்காத வரை பழைய விளையாட்டரங்களை உடைப்பதற்கு அனுமதி தரப்படாது.

பழைய விளையாட்டரங்கை உடைப்பதற்கு ஷா ஆலம் மாநகர்  மன்ற நிலையில் திட்டமிடல் அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அரங்கை உடைப்பதற்கு முன்பாக முழு மேம்பாட்டு வரைபடத்தை சம்பந்தப்பட்ட மேம்பட்டாளர்  சமர்பிக்க வேண்டும் என்பது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்றாகும் என்று ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் புதிய டத்தோ பண்டாரான டத்தோ முகமது பவுஸி முகமது யாத்தியம் கூறினார்.

பழைய அரங்கம் ஏன் இன்னும் உடைக்கப்படவில்லை என்று பலர் கேட்கின்றனர். அரங்கை உடைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னர் மாநகர் மன்றத்திடம்  முழுமையான மேம்பாட்டு திட்ட வரைபடத்தை  மேம்பாட்டாளர் சமர்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை மாநகர் மன்றம் விதித்துள்ளது என்று அவர் சொன்னார்.

மேம்பாட்டு கருத்து வடிவம் ஏற்கனவே இருந்த போதிலும் இவ்விவகாரம் தொடர்பில் மாநகர் மன்றத்திற்கும் மேம்பாட்டாளருக்கும் இடையே விவாதங்கள் நடைபெற்ற போதிலும் சம்பந்தப்பட்டத் தரப்பினர் முழுமையான மேம்பாட்டுத் திட்டத்தை இன்னும் சமர்பிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 12வது டத்தோ பண்டாராகப் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஷா ஆலம் விளையாட்டரங்களை உடைப்பதற்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அந்த ஊராட்சி மன்றம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை மேம்பாட்டாளர் பூர்த்தி செய்தப் பின்னர் அரங்கை உடைக்கும் பணி தொடங்கும் என்றும் மந்திர் புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு டிசம்பர் மாதம் கூறியிருந்தார்.


Pengarang :