BERITA GLOBALMEDIA STATEMENT

கூலாயில் பெண் கடத்தப்பட்டது தொடர்பாக ஒன்பது பேர் கைது

ஜோகூர் பாரு, ஜூன் 7- கூலாயில் பெண் ஒருவர் கடந்த மாதம் கடத்தப்பட்டச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தகவல்கள் மற்றும் உளவு நடவடிக்கையின் வாயிலாக ஜோகூர் மாநில மற்றும் புக்கிட் அமான் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று ஜோகூர், நெகிரி செம்பிலான், மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில கடந்த மே மாதம் 23 முதல் 25 வரை அதிரடி சோதனைகளை மேற்கொண்டு 24 முதல் 48 வயது வரையிலான அந்த ஒன்பது சந்தேகப் பேர்வழி களையும் கைது செய்ததாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் எம். குமார் கூறினார்.

அந்தப் பெண்ணை மீட்பதற்கு பிணைப்பணமாக  வழங்கப்பட்டதாக நம்பப்படும் கணிசமானத் தொகையையும் போலீசார் மீட்டதாக அவர் சொன்னார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவியல் மற்றும் போதைப் பொருள் தொடர்பான முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் ஆறு பேர் மெத்தம்பெத்தமின் போதைப் பொருளை உட்கொண்டிருந்தது தெரிய வந்தது என்றார் அவர்.

கைதான அனைவரும் கடந்த மே 24ஆம் தேதி தொடங்கி 14 நாட்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறிய அவர், இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை சட்டத் துறை துணைத் தலைவர் அலுவலகத்திற்கு நேற்று அனுப்பப்பட்டது என்றார்.

அவர்களில் ஐவர் மீது 1961ஆம் ஆண்டு ஆள் கடத்தல் சட்டத்தின் 3(1)வது பிரிவு மற்றும் தண்டனைச் சட்டத்தின் 383வது பிரிவின் கீழ் நேற்று கூலாய் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.


Pengarang :