SELANGOR

சிலாங்கூர் சுல்தான் கிண்ணப் போட்டியை காண வருவோருக்கு ஹோண்டா சிட்டி காரை வெல்ல வாய்ப்பு

கிள்ளான், ஜூன் 11- எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 17ஆம் தேதி
நடைபெறவிருக்கும் சிலாங்கூர் சுல்தான் கிண்ண கால்பந்து போட்டியைக்
(டி.எஸ்.எஸ்.சி.) காண வருவோருக்கு ஹோண்ட சிட்டி காரை
வெல்வதற்குரிய வாய்ப்பு காத்திருக்கிறது.

மெர்டேக்கா அரங்கில் நடைபெறும் அந்த ஆட்டத்தை கால்பந்து ரசிகர்கள்
நேரில் காண்பதன் மூலம் இந்த அரிய பரிசினைத் தட்டிச் செல்வதற்குரிய
வாய்ப்பு கிட்டும் என்று டி.எஸ்.எஸ்.சி. குழுவின் தலைவரும்
நிர்வாகியுமான டான்ஸ்ரீ அப்துல் கரீம் முனிசார் கூறினார்.

அதிர்ஷ்டக் குலுக்கின் முதல் பரிசான ஹோண்ட சிட்டி காரை
தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக நன்கொடையாக வழங்கி வரும்
கட்டுமான மற்றும் சொத்துடைமை நிறுவனமான கும்புலான் தஞ்சோங்
பாலாய் நிறுவனத்திற்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர்
தெரிவித்தார்.

ஹோண்டா சிட்டி கார் தவிர்த்து கோத்தா கினபாலு மேரியோட்
ஹோட்டல் மற்றும் மலாக்கா நோபல் ரிசோர்ட் ஹோட்டலில் மூன்று
இரவுகள் நான்கு நாட்கள் தங்குவதற்குரிய வாய்ப்பினை இந்த
ஆட்டத்தைக் காண வரும் அதிர்ஷ்டசாலை ரசிகர்கள் பெறுவார்கள்
என்றும் அவர் சொன்னார்.

இங்குள்ள இஸ்தானா ஆலம் ஷாவில் நேற்று நடைபெற்ற 2024 சிலாங்கூர்
சுல்தான் கிண்ண கால்பந்து போட்டிக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு
மற்றும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மாநில அரசின் சார்பாக 10 லட்சம் வெள்ளி
நன்கொடையை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின்
இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் பெற்றுக் கொண்டார்.

அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு வெட்ரன் குழுவினரின் ஆட்டத்துடன்
டி.எஸ்.எஸ்.சி. 2024 போட்டி தொடங்கும் எனக் கூறிய அப்துல் கரீம், ஒரு
மணி நேரத்திற்குப் பிறகு பிரதான ஆட்டம் நடைபெறும் என்றார்.


Pengarang :