MEDIA STATEMENT

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்ற  ஏழு அந்நிய நாட்டினர் கைது

ஷா ஆலம், ஜூன் 17-  மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்ற ஏழு வெளிநாட்டினரை நேற்று அதிகாலை 1.00 மணியளவில் கிள்ளான்,  தெலுக் காடோங் என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர்.

இருபத்தொன்பது  முதல் 51 வயதுக்குட்பட்ட ஐந்து வெளிநாட்டு ஆண்களும் இரண்டு பெண்களும் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதைக் கண்ட பொது நடவடிக்கைப் படை (ஜி.ஓ.எஃப்.) உறுப்பினர்கள் அவர்களிடம்  சோதனை நடத்தியதில்  எந்த பயண ஆவணங்களையும் அந்த அந்நிய நாட்டினரால் சமர்ப்பிக்க இயலவில்லை என்று கோல லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது ரிட்வான் முகமது நோர் @ சலே கூறினார்.

சட்டவிரோத கடல் மார்க்கமாக  மலேசியாவை விட்டு வெளியேற முயற்சித்ததை விசாரணையின் போது அவர்கள் அனைவரும்    ஒப்புக்கொண்டனர்.  மேல் நடவடிக்கைக்காக  அவர்கள் அனைவரும் பந்திங் காவல் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்று அவர்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் நேற்று முதல் 14 நாட்களுக்கு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக  1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :