MEDIA STATEMENT

பொழுதுபோக்கு மையத்தில் கைகலப்பு- இந்தோ. ஆடவர் மரணம், நண்பர் காயம்

கோத்தா கினபாலு, ஜூன் 17- பொழுது போக்கு மையம் ஒன்றில் நேற்று அதிகாலை இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உண்டான கைகலப்பில் இந்தோனேசிய ஆடவர் ஒருவர் உயிரிழந்ததோடு சக நாட்டவரான மற்றொரு நபர் கடுமையான காயங்களுக்குள்ளானார்.

இந்த கைகலப்பில் காயங்களுக்குள்ளான இரு ஆடவர்கள் குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் அவர்களில் ஒருவர் உயிழந்து விட்டதை மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியது என்ற கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி காசிம் மூடா கூறினார்.

மீன்பிடி படகின் ஊழியர்களான அவ்விருவரும் பொழுதை கழிப்பதற்காக அந்த மையத்திற்கு சென்றதாகவும் அங்கு ஏற்பட்ட கைகலப்பில் அவர்கள் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் விடியற்காலை 2.00 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூறிய அவர், இந்த கைகலப்பில் சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.


Pengarang :