MEDIA STATEMENTYB ACTIVITIES

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஸ்ரீ செர்டாங் தொகுதியில் மக்கள் விருந்து- ஜூன் 18ஆம் தேதி நடைபெறும்

ஷா ஆலம், ஜூன் 17- ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஸ்ரீ செர்டாங் தொகுதி மக்கள் உணவு உபசரிப்பை  வரும் ஜூன் 18ஆம் தேதி நடத்தவிருக்கிறது.

கம்போங் ஸ்ரீ அமான் பூச்சோங், சுபாங் ஜெயா மாநகர் மன்ற மண்டபத்தில் (எம்.பி.எஸ்.ஜே.) இரவு 8.00 மணி தொடங்கி நடைபெறும் இந்த விருந்தில் சுமார் 1,500 பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அஸ்மி கூறினார்.

அன்றைய தினம் காலை கோத்தோங் ரோயோங் முறையில் குர்பானி பலியிடல் நிகழ்வும் இரவில் விருந்துபசரிப்பும் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

பல்வேறு நிகழ்வுகளுடன் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விருந்து நிகழ்வில் தொகுதி மக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமாய் அவர் கேட்டுக் கொண்டார்

வட்டார மக்கள் கூட்டாக இணைந்து நிகழ்வுகளை நடத்தும் பாரம்பரியத்தை இத்தகைய நிகழ்வுகளின் வாயிலாக தொடர முடியும் என்பதோடு மக்களிடையே அணுக்கமான நட்புறவையும் வளர்க்க முடியும் என்று அவர்  குறிப்பிட்டார்.

இவ்வாண்டு ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு குர்பானி பலியிடல் நிகழ்வுகளை நடத்த மாநில அரசு 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 1,000 ஆடுகளும் 700 மாடுகளும் பொது மக்களுக்கு வழங்கப்படும். 

இந்த பிராணிகள் சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளிவாசல்கள், சூராவ்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மூலம்  மக்களுக்கு விநியோகிக்கப்படும்.


Pengarang :