MEDIA STATEMENT

வங்கியிலிருந்து வெ.2.42 கோடி  வைப்புத் தொகை மோசடி- முக்கிய சந்தேகப் பேர்வழி கைது

கோலாலம்பூர், ஜூன் 17 –  நிரந்தர வைப்புத் தொகை கணக்குகளிலிருந்து 2 கோடியே 42 லட்சம் வெள்ளியை மோசடி செய்த கும்பலின்  மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோத்தா கினாபாலுவில் உள்ள ஒரு வங்கியின் ஊழியரான பெண்மணி ஒருவர் கடந்த ஜூன் 13ஆம் தேதி தடுப்புக்  காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மறுநாள்  வெள்ளிக்கிழமை (ஜூன் 14) 40 வயதுடைய அந்த  ஆடவர் சபாவில் கைது செய்யப்பட்டார்.

அந்த சந்தேக  நபர் இந்த மோசடியில்  நேரடியாகத் தொடர்புடையவர் என நம்பப்படுகிறது என்று புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.

இதுவரை நாங்கள் இரு நபர்களை கைது செய்துள்ளோம்.  மேலும் பலர் வைப்புத் தொகையிலிருந்து சட்டவிரோதமாகப்  பணத்தை எடுக்கும்  கிரிமினல் கும்பலில் ஈடுபட்டுள்ளனர் என்று நம்புகிறோம்.  என்று அவர் நேற்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

அங்கீகாரம் இன்றி பணத்தை மீட்கும் செயலில் வங்கிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள மோசடிக் கும்பல்  உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளது குறித்து விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரம்லி கடந்த சனிக்கிழமை  கூறியிருந்தார்.

இந்த மோசடி தொடர்பில்   ஜூன் மாத தொடக்கத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் பெட்டாலிங் ஜெயாவில்  கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் வங்கி ஊழியர்களிடம் இருந்து நான்கு புகார்களை போலீசார் பெற்றனர்.

குற்றவியல் சட்டத்தின்  420வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதில்  சம்பந்தப்பட்ட மற்ற நபர்களைக் கண்டறிய அதிகாரிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.


Pengarang :