MEDIA STATEMENT

துப்பாக்கி முனையில் நகைக் கடையில் கொள்ளை- நான்கு கொள்ளையர்கள் கைவரிசை

கோலாலம்பூர், ஜூன் 18- காஜாங் நகரின் பேரங்காடி ஒன்றில் உள்ள நகைக்கடையில் துப்பாக்கியேந்தி கொள்ளையிட்டுத் தப்பிய நான்கு ஆடவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இரு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு சுழல் துப்பாக்கியேந்திய அந்த நான்கு கொள்ளையர்களும் பாதுகாவலர் சீருடையில் முகமூடி மற்றும் கையுறை சகிதம் அந்த பேரங்காடியின் முதல் மாடியிலுள்ள நகைக்கடையை நேற்று மாலை 3.17 மணியளவில் முற்றுகையிட்டதாக காஜாங் மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது நாசீர் ட்ராமான் கூறினார்.

அந்த நகைக்கடையின் கண்ணாடிப் பேழையை சுத்தியலைப் பயன்படுத்தி உடைத்த அக்கொள்ளையர்கள் அதிலிருந்த நகைகளை எடுத்துக் கொண்டனர். பின்னர் கடையின் மேற்கூரையை நோக்கி துப்பாக்கி வேட்டு கிளப்பிய அவர்கள் கட்டிடத்தின் கீழ்த்தளத்திலுள்ள கார் நிறுத்தம் வழியாகத் தப்பினர் என்று அவர் சொன்னார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 1971ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின் (கூடுதல் தண்டனை) 3வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், அந்த பேரங்காடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை (சி.சி.டி.வி.) தாங்கள் ஆய்வு செய்து வருவதோடு சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளிடமும் விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தகவலறிந்தவர்கள் 012-246768 என்ற எண்களில் விசாரணை அதிகாரி ஏ.எஸ்.பி. முகமது அஃபிக் ஃபர்ஹான் முகமது நோரை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :