MEDIA STATEMENTNATIONAL

காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க மலேசியா-துருக்கி இணக்கம்

கோலாலம்பூர், ஜூன் 18- பாலஸ்தீனத்தின் காஸாவுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளை மேலும் அதிகரிப்பதில் ஒன்று பட்டுச் செயல்பட மலேசியாவும் துருக்கியும் இணக்கம் தெரிவித்துள்ளன.

துருக்கி அதிபர் ரிகாப் தாயிப் எர்டோகனுடன் நேற்றிரவு தாம் நடத்திய தொலைபேசி உரையாடலின் போது விவாதிக்கப்பட்ட பல்வேறு விவகாரங்களில் இதுவும் அடங்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அண்மையில்  இத்தாலியில் நடைபெற் ஜி7 அமைப்பின் உச்சநிலை மாநாட்டின் போது காஸாவில் நிகழ்த்தப்படும் இனப்படுகொலை தொடர்பில் தாம் முன்வைத்த அச்சம் மற்றும் ஆட்சேபம் தொடர்பான அனுபவங்களை எர்டோகன் தம்முடைன் பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தற்காப்பு, பொருளாதாரம், கலாசாரம், வர்த்தகம், முதலீடு உள்ளிட்டத் துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கடப்பாட்டை தாங்கள் மறுவுறுதிப்படுத்தியதாகவும் அன்வார் கூறினார்.

வரும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் மலேசியாவுக்கு வருகை தரும்படி அதிபர் எர்டோகனுக்கு தாம் மீண்டும் அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவு 60ஆம் ஆண்டை  எட்டுவதால் அதிபர் எர்டோகனின் வருகை மிகவும் பொருள் பொதிந்த ஒன்றாக விளங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 1964ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி முதல் மலேசியாவும் துருக்கியும் அரச தந்திர உறவுகளைப் பேணி வருகின்றன. அதே சமயம் இரு நாடுகளுக்கும் இடையே விவேக பங்காளித்துவம் ஏற்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன.


Pengarang :