MEDIA STATEMENTNATIONALYB ACTIVITIES

மதிப்பீட்டு வரி உயர்வு- பொதுமக்களுக்கு விளக்கமளிக்க சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் நடவடிக்கை

கிள்ளான், ஜூன் 18- வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள மதிப்பீட்டு வரி உயர்வு குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிப்பதற்கான நடவடிக்கையை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் முன்னெடுத்துள்ளார்.

கிள்ளான் அரச மாநகர் மன்றம் வரும் காலங்களில் மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்குவதை உறுதி செய்வதற்கு இந்த வரி உயர்வு அவசியம் என்பதை பொது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

இவ்விவகாரம் தொடர்பில் பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் அதே வேளையில் இரு தினங்களுக்கு முன்னர் வரி உயர்வு தொடர்பான விளக்கமளிப்பிலும் நான் கலந்து கொண்டேன். அச்சந்திப்பின் போது மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவது குறித்து  மாநகர் மன்ற அதிகாரிகளுடன் விவாதித்தேன் என்று அவர் தெரிவித்தார்.

மதிப்பீட்டு வரி உயர்வு காணும் பட்சத்தில் சேவைத் தரமும் உயர்வு கண்டாக வேண்டுமே தவிர மேலும் மோசமடையக் கூடாது. ஆகவே, இந்த சந்திப்பின் போது குப்பைகளை அகற்றுவது மற்றும் வெள்ளம் தொடர்பான விவகாரங்களை நான் வலியுறுத்தினேன் என்றார் அவர்.

வரி உயர்வு சிறிய அளவில் இருந்தால் அதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதே சமயம் கிள்ளான் அரச மாநகர் மன்றமும் சிறப்பான சேவைகளை வழங்குவதோடு அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்று அவர் சொன்னார்.

இந்த உத்தேச வரி உயர்வுக்கு எதிராக பொது மக்கள் தங்கள் ஆட்சேபத்தைத் தெரிவிக்கலாம் என்றும் குணராஜ் தெரிவித்தார். 

இந்த வரி உயர்வை ஆட்சேபிப்பதற்கு பொது மக்களுக்கு உரிமை உள்ளது. அவர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்திற்கு கடிதம் அனுப்பலாம். இதன் தொடர்பில் நடத்தப்படும் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஊராட்சி மன்றங்கள் 20 முதல் 40 ஆண்டுகளாக மதிப்பீட்டு வரியை மறு ஆய்வு செய்யவில்லை.

காஜாங் நகராண்மைக் கழகம் 39 ஆண்டுகளாக (1985) மதிப்பீட்டு வரியை உயர்த்தவில்லை. கோல லங்காட் நகராண்மைக் கழகம் 37 ஆண்டுகளாகவும் (1987), செலாயாங் நகராண்மைக் கழகம் 32 ஆண்டுகளாகவும் (1989) மதிப்பீட்டு வரியை மறுஆய்வு செய்யவில்லை.

சுபாங் ஜெயா மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மற்றும் பண்டார் சன்வே ஆகிய இடங்களுக்கான மதிப்பீட்டு வரியை கடந்த 1992ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கவில்லை. யுஎஸ்ஜே, பூச்சோங், ஸ்ரீ கெம்பாங்கான், மற்றும் செர்டாங் ஆகிய பகுதிகளில் கடந்த 1996 முதல் அதாவது 28 ஆண்டுகளாக வரி உயர்வை அமைல்படுத்தவில்லை.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 28 ஆண்டுகளாகவும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் 27 ஆண்டுகளாகவும் ஷா ஆலம் மாநகர் மன்றம் 18 ஆண்டுகளாகவும் வரியை உயர்த்தவில்லை.

இருப்பினும், சொத்து உரிமையாளர்கள் இந்த புதிய மதிப்பீட்டு வரிக்கு தங்களின் ஆட்சேபத்தைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட தேதிகளுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களிடம் பொது மக்கள் தங்கள் ஆட்சேபத்தை தெரிவிக்கலாம்.

ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்கான தேதியை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களின் அகப்பக்கம் வாயிலாகவும் அறிந்து கொள்ள இயலும் என்பதோடு  சொத்து உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலும் அதற்கான தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

நகரத் திட்டமிடலை ஆக்ககரமான முறையில் மேற்கொள்வதற்கு இந்த மதிப்பீட்டு வரி மறு ஆய்வு மிக முக்கியம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மே 30ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :