ANTARABANGSAMEDIA STATEMENT

ஹஜ்ஜூப் பெருநாளின் இரண்டாம் தினத்தில் மேற்கு கரை மீது இஸ்ரேல் முற்றுகை

ரமல்லா, (பாலஸ்தீன்) ஜூன் 18- ஹஜ்ஜூப் பெருநாளின் இரண்டாம் தினமான நேற்று மேற்கு கரையின் பல பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியதோடு பாலஸ்தீனர்களின் வீடுகளிலும் சோதனைகளை மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

கல்கிலா நகரை தாக்கிய இஸ்ரேலிய இராணுவம் அங்குள்ள வீடுகளை முற்றுகையிட்டு பொருள்களைச் சேதப்படுத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அனாடோலு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

டோனியா வேவூட் என்ற பாலஸ்தீனப் பெண்ணை கைது செய்த இராணுவத்தினர் பின்னர் அங்கிருந்து வெளியேறியதாக அவர்கள் கூறினர்.

ஜெரிகோவில் உள்ள அக்பாட் ஜாப்ர் அகதிகள் முகாமை சோதனையிட்ட இராணுவ வீரர்கள் அங்குள்ள குடியிருப்புகளைச் சோதனையிட்டதோடு குடியிருப்பாளர்களிடம் மிகவும் மூர்க்கத்தனமான முறையில் நடந்து கொண்டனர்.

மேற்கு கரையிலுள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேலிய இராணுவம் அண்மைய சில ஆண்டுகளாக இத்தகைய சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி காஸா மீது தீவிரத் தாக்குதலைத் தொடங்கியது முதல் இத்தகையச் சோதனைகள் மேலும் அதிகரித்து வருகின்றன.

இராணுவத்திடமிருந்து மட்டுமின்றி சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்தும் பாலஸ்தீனர்கள் கடுமையான தாக்குதலை எதிர் கொண்டு வருகின்றனர்.


Pengarang :