MEDIA STATEMENTNATIONAL

சீனப் பிரதமர் இன்று மலேசியா வருகை- பொருளாதார ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பர்

கோலாலம்பூர், ஜூன் 18- சீனப் பிரதமர் லீ கியாங் மலேசியாவுக்கு வருகை புரியும் போது முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றோடு பசுமை எரிசக்தி, மூலப் பொருள் துறைகள் குறித்து சீனாவும் மலேசியாவும் பேச்சு நடத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

சீனப் பிரதமராக கடந்தாண்டு மார்ச் மாதம் பதவியேற்ற லீ மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இன்று மலேசியா வருகிறார். மலேசியா-சீனா இடையிலான அரச தந்திர உறவின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி அவரின் இந்த வருகை அமைகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் சீனப் பிரதமர் இந்த வருகையை மேற்கொள்கிறார்.

இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின் போது மடாணி கட்டமைப்புக்கு ஆதரவளிக்கும் மற்றும் வர்த்தகம், முதலீடு, சேவைத் துறைகளை  வலுப்படுத்தும்  புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கியத் தன்மை மீது  கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய பொருளாதார ஆய்வுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அந்தோணி தாஸ் கூறினார்.

போட்டித் தன்மையை வலுப்படுத்துவது, நிதி நிலை, கடன் அளவு, சேவை வழங்குதல் மற்றும் நிர்வாகம் மீது மலேசியா கவனம் செலுத்தும் வேளையில் இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் இரு நாடுகளுக்கும் பயன்தரக்கூடிய விஷயங்கள் மையப்புள்ளியாக இருக்கும் என அவர் சொன்னார்.

மலேசியாவும் சீனாவும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆரோக்கியமான மற்றும் ஆக்ககரமான உறவுகளைப் பேணி வருவதை கடந்த ஆண்டுகளில் பதிவான வலுவான வர்த்தக அளவு நிரூபிக்கிறது என்று மலேசிய-சீன நட்புறவுச் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் மஜிட் அகமது கான் கூறினார்.

மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா கடந்த 15 ஆண்டுகளாக விளங்கி வருகிறது. கடந்தாண்டு அந்நாட்டுடனான மலேசியாவின் வர்த்தக மதிப்பு 45,084 கோடி வெள்ளியாக வெள்ளியாக இருந்தது. இது மலேசியாவின் உலக வரத்தகத்தில் 17.1 விழுக்காடாகும்.


Pengarang :