MEDIA STATEMENT

உணவில் நச்சுத்தன்மை- கேட்டரிங் நடத்துநர் உள்பட 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு

ஷா ஆலம், ஜூன் 18- அண்மையில கோம்பாக்கில் உணவில் நச்சுத்தன்மை காரணமாக இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கேட்டரிங் எனப்படும் உணவு விநியோகத் தொழில் நடத்துநர் உள்பட 15 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், செயல்குழுவினர், தலைமையாசிரியர், உணவைச் சமைத்தவர்கள் ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாக கேம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் அரிபின் முகமது நாசீர் கூறினார்.

நச்சுணவை உண்டதால் பாதிக்கப்பட்டவர்களிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அவர் கூறியதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

கோம்பாக்கில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்வின் போது பீகூன் மற்றும் பொறித்த முட்டையை உட்கொண்ட 17 வயது இளைஞரும் இரு வயது குழந்தையும் உயிரிழந்ததாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.

 தன் தாயார் கொண்டு வந்த உணவை உட்கொண்ட அந்த பதின்ம வயது இளைஞர் கடுமையான வயிற்றுப் போக்கிற்கு ஆளானார். இரண்டாவது சம்பவத்தில் பள்ளியின் பாதுகாவலரின் மகள் பாதிக்கப்பட்டார்.

இந்த மரணச் சம்பவம் தொடர்பில் மாநில அரச மாநில சுகாதாரத் துறையின் வாயிலாக விரிவான விசாரணையை மேற்கொள்ளும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.

கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்திற்கு சல்மோனெல்லா பாக்ரியா காரணம் என சுகாதார அமைச்சு முன்னதாக கூறியிருந்தது.


Pengarang :