MEDIA STATEMENTNATIONAL

நான்கு சக்கர இயக்க வாகனம் மின் கம்பத்தை மோதியது- இளம் பெண் மரணம், நால்வர் காயம்

கோத்தா பாரு, ஜூன் 18- கோல கிராய்- குவாங் மூசாங் சாலையில் இன்று காலை நான்கு சக்கர இயக்க வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தை மோதியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் நால்வர் காயங்களுக்குள்ளாயினர்.

இச்சம்பவம் குறித்து இன்று காலை 7.17 மணியளவில் பொது மக்களிடமிருந்து தாங்கள் தகவலைப்  பெற்றதாக கிளந்தான் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

குவா மூசாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த எழுவர் கொண்ட குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு வீரர்கள் டோயோட்டா ஹைலக்ஸ் ரக வாகனம் ஒன்று மின் கம்பத்தை மோதி விபத்துள்ளாகியுள்ளதைக் கண்டனர் என்று அவர் சொன்னார்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு அந்த வாகனத்தில் சிக்கியிருந்த இளம் பெண் ஒருவரை  சிறப்பு உபகரணங்கள் மூலம் மீட்டு வெளியே கொண்டு வந்தனர் என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்ட வேளையில் மற்றொருவர் கடுமையான காயங்களுக்கும் மேலும் மூவர் லேசான காயங்களுக்கும் உள்ளாகியிருந்தனர் என்றார் அவர்.

காயமடைந்த பயணிகள் அனைவரும் சிகிச்சைக்காக குவா மூசாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்


Pengarang :