MEDIA STATEMENT

சான்றளிக்கப்படாத தொலைத் தொடர்பு உபகரணங்களை வைத்திருந்த இரு இயக்குநர்களுக்கு அபராதம்

புத்ராஜெயா, ஜூன் 18- சான்றளிக்கப்படாத தொலைத் தொடர்பு உபகரணங்களான வாக்கி டாக்கி மற்றும் பல்வேறு வயர்லெஸ் அடெப்டர்களை விற்பனை நோக்கத்திற்காக வைத்திருந்த குற்றத்தை ஒப்புக் கொண்ட நிறுவன இயக்குநர்கள் இருவருக்கு சபா மாநிலத்தின் கோத்தா கினபாலு செஷன்ஸ் நீதிமன்றம் அபராதம் விதித்தது.

நீதிபதி அமிர் ஷா அமிர் ஹசான் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்ட அவ்விரு இயக்குநர்களுக்கும் முறையாக 5,500 வெள்ளி மற்றும் 2,500 வெள்ளி அபராதமாக விதிக்கப்பட்டது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி விற்பனை நோக்கத்திற்காக ஐந்து வாக்கி டாக்கிகள் மற்றும் ஆறு வயர்லெஸ் அடெப்டர்களை வைத்திருந்ததாக 29 வயதுடைய உள்நாட்டு ஆடவருக்கு எதிராக 2000ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லுடக விதிமுறைகளின் 16(1)(பி) இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அதே இடத்தில் அதே நேரத்தில் இரு வாக்கி டாக்கிகளை வைத்திருந்தாக அதே சட்டத்தின் கீழ் 41வயதுடைய மற்றொரு உள்நாட்டு ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 300,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது மூன்றாண்டுச் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க இந்த சட்ட விதி வகை செய்கிறது.


Pengarang :