ECONOMY

காவல் துறையின் வேன் மீது மரம் விழுந்து போலீஸ் கார்ப்ரல் மரணம்

லஹாட் டத்து, ஜூன் 22- காவல் துறையின் வேன் மீது மரம் விழுந்ததில் அதனை ஓட்டிச் சென்ற போலீஸ் கார்ப்ரல் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் இங்குள்ள துங்கு பெல்டா சஹாபாட் 16, ஜாலான் குளுகோரில் நேற்று  நிகழ்ந்தது.

பிற்பகல் 2.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 44 வயதான அந்த போலீஸ்காரர் சம்பவ இடத்திலியே உயிரிழந்ததாக லஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜூல்பாஹ்ரின் இஸ்மாயில் கூறினார்.

அந்த போலீஸ்கார ர் கோம்டெக் சஹாபாட் 16, பொது சிறப்பு படை முகாமிலிருந்து பந்தாய் சஹாபாட் 16 நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தை அடைந்த போது சாலை வலது புறம் இருந்த மரம் திடீரென வேனின் மீது விழுந்தது. இதில் வேனின் முன்புறம் கடுமையாகச் சேதமுற்றது என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

அதே நேரத்தில் அச்சாலையின் எதிர்தடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த மற்றொரு போலீஸ்காரர் இச்சம்பவத்தை நேரில் கண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்

இவ்விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட ஜூல்பர்ஹான், இதன் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்றார்.


Pengarang :